அவற்றை வரிசைப்படுத்தியதும், அவற்றிற்குப்
பெயரிட்டதும், கருவி வேற்றுமையையும் உடனிகழ்ச்சி
வேற்றுமையையும் ஒன்றுசேர்த்து ஒரு வேற்றுமை
யாக்கியதுமே, முதனூலாசிரியனும் வழிநூலாசிரியனுமான
இலக்கணியர் செய்த வினைகளாம். இவற்றின் விளக்கத்தை
என் "தொல்காப்பிய விளக்கம்" என்னும் நூலிற் காண்க.
வேற்றுமை யெட்டும் அல்லது ஒன்பதும்,
இலக்கணநூலார் வகுத்த வரிசையொழுங்கில் தோன்றியிருக்க
முடியாது. அவ்வவ் வேற்றுமைக் கருத்துத் தோன்றியபோது
அவ்வவ் வேற்றுமையுருபு தோன்றியிருத்தல்வேண்டும்.
ஒருவன் முதலில் தானே வினைமுதலாயிருந்து
ஒன்று செய்வதே இயல்பாதலாலும், ஒருவன் வரலாற்றை "ஓரூரில்
ஒருவன் இருந்தான்" என்று தொடங்குவதே மரபாதலாலும்,
முதலாவது எழுவாய்க் கருத்துத் தோன்றியிருத்தல் வேண்டும்.
அதற்கு உருபு தேவையில்லை; இயல்பான பெயரே போதும்.
திரிமொழிகளிலேயே எழுவாய் வேற்றுமைக்கும் உருபு
அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் இயன்மொழி யென்பதற்கு,
அதில் எழுவாயுருபின்மையும் ஒரு சான்றாம்.
ஒருவன் ஒருத்தியுடன் அல்லது இன்னொருவனுடன்
பேசு முன், அவரை விளிக்காது இருக்கமுடியாது. இது
மொழிதோன்றாத நிலையிலும் நிகழும்.
ஒருவன் ஒரு வினை செய்யினும் ஒன்றும் செய்யாது
சும்மா விருப்பினும், அவன் இருக்க ஓர் இடம்வேண்டும்.
ஆதலால், இடக் கருத்து அடுத்துத் தோன்றியிருக்கலாம்.
மலைக்குகையில் வதிந்த அநாகரிக மாந்தனுக்கும்
நிலையான தனியிடம் வேண்டியிருந்ததினால், உடைமைக்
கருத்துத் தோன்றி யிருக்கும்.
மாந்தன் வினைகளுள், சிலவற்றிற்கு ஒன்றும்
தேவையில்லை; சிலவற்றிற்கு ஏதேனும் வேண்டும்.
எழுதலும் நடத்தலும் தாமாக நிகழும். ஆயின் பறித்தலும்
உண்டலும் காய்கனிபோன்றவையின்றி நிகழா. உண்ணுதல்
உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத வினை. ஒன்றும்
புதிதாய்ச் செய்யாத அநாகரிகக் காலத்திலும் மாந்தன்
இயற்கையுணவை உண்டுவந்தான். அதனால், செய்பொருட்
கருத்துத் தோன்றியிருக்கும்.
கிழங்கைத் தோண்டுவதற்கும் விலங்கு
பறவைகளைக் கொல்வதற்கும், கல்லும் கோலும்
போன்ற கருவிகள் தேவைப்பட்ட போது, கருவிக்
கருத்துத் தோன்றியிருக்கும்.
|