பறித்தும் அகழ்ந்தும் வேட்டையாடியும்
கொண்டு வந்த பொருள்களை, மனைவிமக்கட்கும் உற்றார்
உறவினர்க்கும் கொடுத்தபோது, கொடைக்கருத்துத் தோன்றியிருக்கும்.
மரமேறிக் கனிபறித்தவனும் மலையேறித்
தேனெடுத்தவனும், கீழிறங்கியபோது அல்லது தவறி
விழுந்தபோது, அல்லது காய்கனி மரத்தினின்று கீழே
விழுந்தபோது, நீக்கக் கருத்துத் தோன்றி
யிருக்கும்.
மாந்தன் கூடிவாழும் உயிரியாதலால், ஓரிடத்திலிருப்பினும்,
ஒன்றைச் செய்யினும், ஓரிடம் செல்லினும், பெற்றோருடன்
அல்லது மனைவியுடன் அல்லது மக்களுடன் அல்லது நாயுடன்
(அல்லது கருவியுடன்) இருக்கவும் செய்யவும் செல்லவும்
நேர்ந்தபோது, உடனிகழ்ச்சிக் கருத்துத் தோன்றியிருக்கும்.
இங்ஙனம் எண் அல்லது தொண்வேற்றுமைகளும்,
குறிஞ்சி வாழ்க்கை நிலையிலேயே முந்துதமிழர்
மொழியில் தோன்றியிருத்தல் வேண்டும்.
வேற்றுமையுருபுகளின் வரலாறு
உருத்தல் தோன்றுதல். உரு=தோற்றம்,
வடிவம், உடம்பு, தனிப்பொருள். உரு-உருவு-உருவம்.
உருவு-உருபு=வேற்றுமை வடிவ மான சொல் அல்லது அசை.
2ஆம் வேற்றுமையுருபு (செய்பொருள்)
ஐ. ஆய்-ஐ. பெட்டியாய்ச் செய்தான் = பெட்டியைச்
செய்தான்.
3ஆம் வேற்றுமையுருபு
ஆல்-ஆன் (கருவி)
இல் என்னும் (7ஆம் வேற்றுமை) இடப்பொருளுருபு
கருவிப் பொருளிலும் ஆளப் பெறும்.
எ-டு: மையில் எழுது = மையால் எழுது.
செருப்பிலடித்தான் = செருப்பாலடித்தான்
(மேலை வடார்க் காட்டு வழக்கு).
ல-ன். ஒ.நோ: மேல-மேன. இல்-ஆல்-ஆன்.
உடன்-ஒடு-ஓடு (உடனிகழ்ச்சி)
உல்லுதல்=பொருந்துதல், கூடுதல். உல்-உள்-உடு-உடன்.
4ஆம் வேற்றுமையுருபு (கொடை)
கு. ஒக்க என்னும் சொல் கு என்று திரிந்திருக்கலாம்.
அவனொக்கக் கொடுத்தான்-அவனுக்குக்
கொடுத்தான்.
|