|
8ஆம் வேற்றுமையுருபு
(விளி)
பெயர்கள் விளிக்கப்படும் நிலையில்
அடையும் வடிவே 8ஆம் வேற்றுமையுருபாம். அவ் வடிவு
பெயர்களின் ஈற்றைப் பொறுத்தது. விளியேற்ற
பெயர்கள் பெரும்பாலும் திரியும், சிறுபான்மை
திரியா.
திரியும் பெயர்கள் சேய்மைச்
சுட்டாயின், அளபெடுக்கும்; திரியாப் பெயர்கள்
சேய்மைச் சுட்டாயின், அவற்றிற்கு முன் அளபெடுத்த
ஏ அல்லது ஓ என்னும் விளியொலி சேர்க்கப்பெறும்;
அப் பெயர்களின் ஈறும் சிறுபான்மை அளபெடுக்கும்.
திரியும் பெயர்க்கு முன்னும் ஏ அல்லது ஓ
சேர்க்கப்பெறுவதுமுண்டு.
எ-டு: இயல்புவிளி: பேரின்பம்,
நம்பிக்கை.
திரிபுவிளி : ஈறு மிகுதல்
- தெய்வமே, மகனே
ஈறு கெடுதல் -
ஐய, இளஞ்செழிய
ஈறு திரிதல்
- தம்பீ, பிள்ளாய்
ஈற்றயல் ஈறு திரிதல்
- மாணவீர், நம்பிமீர்
ஈறு கெட்டு அயல்ஈறு திரிதல்
- அழகா, நண்பா
ஈறு கெட்டு அயல் திரிந்து ஈறு
மிகுதல்-ஐயாவோ, அம்மேயோ
சேய்மை விளி:
கண்ணா அஅஅஅ
ஏஎஎ அண்ணா அஅஅஅ
ஓஒஒ ஐயா அஅஅஅ
ஏஎஎ பேரின்பம்
ஏஎஎ மதுரம்ம்ம்ம்
எல்ல என்னும் விளிச்சொல்
விளியொலிகளுள், எல்ல என்பது
தொன்றுதொட்டு வருவதும், இருவகை வழக்கிலும்
வழங்குவதும், இலக்கணத்தில் இடம்பெற்றதும்
தமிழின் முன்மையையும் பிறமொழிகளின்
பின்மையையும் உணர்த்துவதும், ஆங்கிலத்திற்கும்
தமிழுக்குமுள்ள அணுக்கத்தைக் காட்டுவதும் ஆகும்.
எல்ல என்பது, முதற்காலத்தில். கணவனும்
மனைவியும் ஒருவரையொருவர் விளிக்கும்
பொதுவொலியா யிருந்தது. இதையே,
"முறைப்பெயர் மருங்கின் கெழுதகைப்
பொதுச்சொல்
நிலைக்குரி மரபின் இருவீற்றும் உரித்தே" (1166)
என்று தொல்காப்பியம் கூறும். இது
எல்லா என்று ஈறு நீண்டு எல்லே என்றும் திரிந்தது.
|