பக்கம் எண் :

இயனிலைப் படலம்31

"நில்லாங்கு நில்லாங் கிவர்தரல் எல்லாநீ" (30)

என்னும் மருதக்கலியில், எல்லா என்பது தலைவி தலைவனை விளித்தது.

"எல்லா விஃதொத்தன் என்பெறான் கேட்டைக்காண்" (25)

என்னும் குறிஞ்சிக்கலியில் எல்லா என்பது தோழி தலைவியை விளித்தது.

"எல்லே!-துடிகொளிடை மடத்தோழீ" (5:3:5)

என்னுந் திருவாய்மொழி யடியில், எல்லே என்பது தலைவி தோழியை விளித்தது.

எல்லா என்பது பின்பு ஏலா என்று முதல் நீண்டது.

"குறவன் மகளாணை கூறலோ கூறேல்" (8:69)

என்னும் பரிபாடலடியில் ஏலா என்பது தோழி தலைவனை விளித்தது.

கரூர்ப்பக்கத்தில், கணவன் மனைவியை ஏலா என்று விளிப்பது, இன்றும் கல்லா மக்களிடை வழக்கமாயிருக்கின்றது.

நெல்லை நாட்டார், சிறுவரையும் கீழோரான ஆடவரையும் இன்று ஏல, ஏலே என்று விளிக்கின்றனர். கணவன் மனைவியை ஏழா என்று விளிப்பது அந் நாட்டுக் கீழோர் வழக்கம். ஏல-ஏழ-ஏழா.

ஏழ என்பது பின்பு ஏட என்று திரிந்தது.

"ஏடா அழியல் எழுந்திது கொள்ளாய்" (14:12)

என்னும் மணிமேகலையடியில், ஏடா என்பது சிந்தாதேவி ஆபுத்திரனைவிளித்தது. ஏட-ஏடா இவை ஆடூஉ (ஆண்பால்)விளி. ஏடி, ஏடீ என்பன மகடூஉ (பெண்பால்) விளி.

ஏட என்பது பின்பு அட-அடா-அடே எனத் திரிந்தது. இத் திரிபுகளும் ஆடூஉ விளியாம். அடி-அடீ என்பன மகடூஉ விளியாம்.

"நில்ல டீஇயெனக் கடுகினன் பெண்ணென நினைந்தான்"

(கம்பரா. ஆரணி. 93)

என்பதில் அடீ என்பது இலக்குமணன் குர்ப்பணகையை விளித்தது.

அட, அடா என்னும் சொற்கள் கழிவிரக்கக் குறிப்பாகவும் வழங்கும்.

அடா என்பது தெலுங்கில் அரா-ரா என்றும், அடே என்பது வடமொழியில் அரே-ரே என்றும் திரிந்து வழங்குகின்றன. இந்தியில் அடே என்பது அரே-ரே என்றும், அடட என்பது அரர என்றும்