பக்கம் எண் :

34தமிழ் வரலாறு

மெய்யெழுத்திற்கு "அ" சாரியை. அது மெய்க்குப்பின் வரும். க என்பது சாரியை யேற்ற மெய்யெழுத்திற்கும் க என்னும் குறிலுக்கும் பொதுவாயிருப்பதால், மெய்யெழுத்தை விதந்து குறிக்கும்போது ககரமெய் என்பது மரபு.

உயிர்மெய்யெழுத்துகளுள், குறிலுக்குக் கரம் சாரியை; நெடிலுக்குத் தனிச்சாரியை இல்லை. அதனால் மெய்யையும் நெடிலையும் பிரித்துக் ககர ஆகாரம் (கா), ககர ஈகாரம் (கீ) என்ற முறையிற் சொல்லப்பெறும்.

சொற்சாரியை

அ, அத்து, அம், அற்று, அன், ஆம், இற்று, இன், உ, ஐ முதலியன சொற்சாரியை.

எ-டு: தட்டாரப்பாட்டம், எனக்கு, பட்டினத்தான், குளத்துப் பாய்ச்சல், புளியம்பழம், அவற்றை, அதனை, கல்லாங் கொள்ளி, பதிற்றுப்பத்து, பதினொன்று, வேரினை, அவனுக்கு, பண்டைக் காலம்.

இவற்றுள், அற்றுச்சாரியைப் புணர்ச்சியும் இற்றுச்சாரியைப் புணர்ச்சியும் இன்று உலக வழக்கற்றன. அவைகள் என்பது மிகை படக்கூறும் வழூஉச் சொல்லும், அதுகள் என்பது இழிவழக்கும் ஆகும். ஆதலால், அவற்றை இவற்றை எவற்றை என்றே குமரி நாட்டுப் பொதுமக்கள் வழங்கியிருத்தல் வேண்டும்.

சாரியைகளும் சுட்டடியினவே.

வினையீறுகள்

தன்மைவினை யீறுகள்

(1) தன்மையொருமைப் பெயரினின்று தோன்றியவை

ஏன்-என்- அன்-அல்

அன், அல் எதிர்காலத்தில் மட்டும் வரும்.

(2) செய்து என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையினின்று தோன்றியவை

செய்+அது = (செய்தது) - செய்து-து. து-டு, து-று.

(3) எதிர்கால வினைமுற்றினின்று தோன்றியது.

செய்யும்+ஏன் = (செய்யுமேன்) - செய்யுவேன் - செய்வேன்- செய்கேன் - செய்கு - கு.

வ-க, போலி. ஒ. நோ: ஆவா-ஆகா, சிவப்பு-சிகப்பு.