பக்கம் எண் :

இயனிலைப் படலம்45

தாது. அங்ஙனமே, செய்துகொண்டு என்னும் சொற்போல், அது தனி நின்று நிகழ்காலத்தை யுணர்த்தாது. மேலும், நிகழ்கால நிகழ்ச்சி வேறு; ஒருங்கு நிகழ்ச்சி வேறு. ஆயினும், நீரில் ஆழ்பவன் சிறு கோலையும் பற்றுவதுபோல், இலக்கணியர் ஒருங்கு நிகழ்ச்சியைப் பற்றுக்கோடாகக் கொண்டு, செய்ய என்னும் சொல்லை நிகழ்கால வினையெச்சமாகக் காட்டியுள்ளனர். ஆயின், அதற்கு நிகழ்கால முணர்த்தும் ஆற்றலின்மையின், முவகைத் தொடர்ச்சிக்காலத்தை யும் (Continuous Tenses), முறையே, 7ஆம் வேற்றுமைத் தொழிற்பெயராலும் இறந்தகால வினையெச்சத்தாலும் முற்றெச்சத்தாலுமே உணர்த்திவந்திருக்கின்றனர்.

எ-டு:

"தட்டுப்புடைக்கண் வந்தான்" (தொல்.சொல்.77, இளம். உரை)

- இ.கா.தொடர்ச்சி

"கண்கவ ரோவியங் கண்டுநிற் குநரும்" (மணிமே. 3:131)

- நி.கா.தொடர்ச்சி

"நீர்வார்த்துக் கால்கழுவா நின்று" (நள. 232)

"ஆடினிர் பாடினிர் செலினே" (புறம்.109)

- எ.கா.தொடர்ச்சி

செய்துகொண்டு என்னும் நிகழ்கால வினையெச்சம் (Present Participle ) உலகவழக்கில் இருக்கவும், அதைப் பயன்படுத்தாது இங்ஙனம் இடர்ப்படுவது, கனியிருக்கப் பூம்பிஞ்சைக் கவர்வ தொப்பதே.

பண்டை யிலக்கியத்தில் இல்லாத சொல்லெல்லாம் பிற்காலத் தவை யெனக் கொள்வது பெருந்தவறாம். பண்டை நூல்கள் இற்றை அகரமுதலிகளல்ல. பொதுமக்கள் பழஞ்சொற்றொகுதி தலைக் கழகக் காலத்தினின்று சற்றும் மாறாது இருந்துவந்திருக்கின்றது. ஆரிய வருகைக்கு முந்திய தமிழ்நூல் அனைத்தும் இறந்துபோயின.

செய்துகொண்டு என்னும் சொல், தமிழின் அடிப்படைச் சொற்களுள் ஒன்றாயும், நாட்டுப்புற மக்கள் பேச்சில் ஆழ வேரூன்றிய தாயும், தமிழ்நாடெங்கணும் இன்றும் செய்துகிட்டு, செய்துகிண்டு, செய்துகினு எனப் பல்வேறு கொச்சைவடிவில் வழங்குவதாயும், தமிழினின்று நீக்கமுடியாததாயும் உள்ளது.

காடைக்கண்ணி, குதிரைவாலி என்னும் சிறு தவசங்கள் தொன்று தொட்டுப் பாண்டிநாட்டில் விளைந்துவரினும், அவை இன்றுள்ள பண்டை யிலக்கியத்தில் இடம்பெறவே யில்லை.