பொதுமக்கள் பேசுவதே மொழியென்று,
பிறமொழிகளின் வழுநிலையைத் தமிழிற் புகுத்தி,
அதன் செம்மையரணைத் தகர்க்கப்
பார்க்கின்றனர். நக்கீரன்மார் அவரைக்
தடுத்துத் திருத்துதல் வேண்டும். உலக மொழிகள்
எல்லாவற்றுள்ளும், செம்மை என்னும் வரம்புள்ளது
தமிழ் ஒன்றே.
(12) மரபுவழக்கு
மரபாவது இளமைப்பெயர்,
ஆண்பாற்பெயர், பெண்பாற் பெயர், நிலைத்திணைச்
சினைப்பெயர், விலங்குக் காவலர் பெயர், அஃறிணை
யுயிரிகளின் கத்தல்வினைகள், ஊண்வினைகள்
முதலியனபற்றி, உயர்ந்தோர் தொன்றுதொட்டு எச்
சொற்களை வழங்கினார்களோ அச் சொற்களையே
வழங்குதல்.
பொதுவாகப் பறவைகளின் இளமையைக்
குஞ்சு என்றும், விலங்குகளின் இளமையைக் குட்டி
என்றும் சொல்லவேண்டும். ஊருயிரிகளின்
இளமைப்பெயர் இவ் விரண்டில் ஒன்றாயிருக்கும்.
நண்டுக்குஞ்சு என்றும் எலிக்குட்டி என்றும் கூறுவது
மரபு. ஆயினும், எலிக்குட்டியை எலிக்குஞ்சு என்னும்
வழக்குமுண்டு. ஆயின், நண்டுக்குஞ்சை
நண்டுக்குட்டியென்னும் வழக்கம் இல்லவே யில்லை.
மக்கள் இளமையை மகவு, குழவி, பிள்ளை என்று
சொல்வதே மரபாயினும், கடைசிப்பிள்ளையைக்
கடைக்குட்டி என்னும் வழக்குண்டு.
பிள்ளை என்னும் இளமைப்பெயர்
ஏறத்தாழ எல்லா வுயிரினத்திலும் சென்று வழங்கும்.
‘இருக்கும் பிள்ளை மூன்று, ஓடும் பிள்ளை மூன்று,
பறக்கும்பிள்ளை மூன்று‘ என ஒரு சொலவடையுண்டு.
ஆயின், இவ் வரம்பிறந்து பிள்ளைச்சொல்
வழங்குவது தவறாம்.
கிழவன் என்னும் சொல் பெண்பாலிற்
கிழத்தி என்றாவது போல் புலவன் என்னும் சொல்
புலத்தி என்றாகும். இங்ஙனம் அமைக்காத
பெண்பாற்புலவர் என்பது வழுவாம்.
தன் சொல்லைத் தவறாய்
வழங்குவதுபோன்றே, அயற் சொல்லை ஆள்வதும்
மரபுவழுவாம். வாலிபன், வாலிபப்பெண்
என்பவற்றிற்குப் பகரமாக, இளைஞன், இளைஞை என்னும்
தென்சொற்களையே வழங்கவேண்டும்.
வெங்காயப்பல், பலாச்சுளை, பனைநுங்கு,
வாழைப்பழச் சதை, கற்றாழஞ்சோறு என்று கூறுவது
மரபாம்.
ஆட்டிடையன், பன்றிமேய்ப்பன்,
குதிரைவாதுவன், யானைப் பாகன் என்றே
கூறுதல்வேண்டும்.
|