முதற்காலத்தில் நெடில்களே தமிழில்
வழங்கின. பின்பு அவற்றின் குறில்கள் தோன்றின.
ஏகார ஓகாரங்கள் பிந்தித் தோன் றிய
நெடில்களாதலின், அவற்றின் குறில்களும் பிந்தியே
தோன்றி யுள்ளன. எகர ஒகரக் குறில்வரிகட்கு
மிகைக்குறி யிருப்பதே இதற்குப் போதிய
சான்றாம். இவ்விரு குறில்களும் தோன்று முன்னரே,
ஒருசார்த் தமிழர் விந்தியமலையடுத்தும்
அதற்கப்பாலும் குடியேறி யிருந்திருக்கின்றனர்.
அவர் மொழியே பின்பு சூரசேனி, மாகதி,
மகாராட்டிரம் முதலிய பிராகிருதங்களாகப்
பிரிந்துபோயிருக் கின்றது. அப்
பிராகிருதங்களின் திரிபே இந்தி, வங்கம்,
மராத்தி, குசராத்தி முதலிய இற்றை மொழிகள்.
இவற்றில் எகர ஒகரக் குறில்கள் இல்லை. ஆயின்,
இவற்றின் அடிப்படைச் சொற்கள் தமிழா
யிருப்பதுடன், தொடரமைப்பிலும் இவை தமிழையே
முற்றும் ஒத்திருக்கின்றன. இவற்றிலுள்ள எண்களும்
ஒருமை பன்மை யென்னும் இரண்டே. இந்தியில் ஆண்
பெண் என்னும் இரு பாலே உள. இம் மொழிகளில்
வழங்கும் மரபுத்தொடர்களையும் பழமொழிகளையும்
நோக்கின், இவற்றைப் பேசும் மக்களின்
முன்னோர் திரவிடரா யிருந்திருத்தல் வேண்டும்
என்னும் முடிபிற்கே வரமுடியும்.
மராத்தியும் குசராத்தியும்
ஒருகாலத்தில் திரவிட மொழி களாய்க்
கொள்ளப்பெற்று, பஞ்சதிரவிடத்தின் இரு
கூறுகளாய்க் குறிக்கப் பட்டன. மராத்தியை
அடுத்துத் தெற்கே வழங்குவது தெலுங்கு.
விந்தியமலைக்கு வடக்கிலுள்ள இந்தி,
வங்கம் முதலிய மொழிகளை வடதிரவிடம் அல்லது
முன்திரவிடம் என்றும், அம் மலையை யடுத்த
மராத்தி, குசராத்தி முதலிய மொழிகளை நடுத்
திரவிடம் அல்லது இடைத்திரவிடம் என்றும்,
அவற்றிற்குத் தெற் கிலுள்ள தெலுங்கு, கன்னடம்
முதலிய மொழிகளைத் தென் திர விடம் அல்லது
பின்திரவிடம் என்றும் கொள்ளினும் பொருந்தும்.
இற்றை நிலையில் இந்தி வங்க
முதலியவற்றை வடநாவலம் என்றும், மராத்தி
குசராத்தியை நடுநாவலம் என்றும், கொள்வதும்
பொருத்தமாம்.
தமிழ் வடக்கே சென்று திரவிடமாய்த்
திரிந்ததென்பதற்குச் சான்றாக, முதற்கண்
தென்திரவிடத்தில் தென்கோடி மொழிகளுள்
ஒன்றான தெலுங்கினின்றும் வடகோடி மொழிகளுள்
ஒன்றான பிராகுவீயினின்றும், சில சொற்கள் ஈண்டு
எடுத்துக்காட்டப் பெறும்.
|