தமிழில் ஏவலொருமை ஈறு பெற்றும் பெறாதும் வரும். இயல்பான பெயர் வடிவம் ஒருமையாயும், அதன் ஈறு பெற்ற வடிவம் பன்மையாயும் இருத்தல் போல்; இயல்பான வினைவடிவம் ஏவலொருமையாயும், அதன் ஈறுபெற்ற வடிவம் ஏவற் பன்மையாயும், வரும் என்க. | இருவகை ஏவலொருமையுள், ஈறு பெறாததே இயல்பானதும் சிறப்புடையதுமாகும். உலகவழக்கில் ஈறு பெறாததே ஒருமை யேவலா யிருத்தல் காண்க. ஒவ்வொரு மொழியும் பொதுமக்களமைப்பென்றும், அதன் இலக்கியமே புலமக்க ளமைப்பென்றும், உலக வழக்கு மொழியே இலக்கிய வழக்கு மொழிக்கு முந்தியதும் மூலமுமாகு மென்றும், தெற் றெனத் தெரிந்துகொள்க. | ஒருவனை நோக்கி ஒன்றைச் செய்யுமாறு ஏவும்போது, அவன் மறுப்பின், இதை யெனக்குச் செய்யமாட்டாயா என்னும் வினாப்பொரு ளில், இதைச் செய்யமாட்டாய் என்று குரல் மாற்றி இரப்பது வழக்கம். அக் குறிப்பு வினாவின் பொருள் இதைச்செய் என்பதே. இதனையே, | | "செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல் செய்யென் கிளவி ஆகிடன் உடைத்தே." | (933) | என்று குறித்தார் தொல்காப்பியர். இதன் பொருளையும் இதன் நடையை யும் சற்றும் நோக்காது, ஈறு பெறாது வரும் ஏவலொருமையெல்லாம் ஆயீறு புணர்ந்து கெட்டனவென்று வடமொழி யடிப்படையிற் பிறழ வுணர்ந்து பிழைபடக் கூறலாயினர் உரையாசிரியரெல்லாம். தமிழைத் தமிழடிப்படையிற் கற்றாலன்றி அதன் உண்மைப்பொருளை உணர முடியாதென்பதற்கு, இஃதொரு சிறந்த சான்றாம். இத்தகைய பொருள் களையெல்லாம் இந் நூலாசிரியர் தமிழடிப்படையில் ஆய்ந்து, பல்லா யிரம் ஆண்டுகட்குப்பின் மீண்டும் தமிழ்மரபிற் கொத்தவாறு எடுத்துக் கூறியது பெரிதும் பாராட்டத்தக்கதாம். | எழுத்தியல், பால்பகா அஃறிணைப் பெயர், வினையாலணையும் பெயர், வினையியல், ஆங்கிலமொட்டிய வழுவழக்கு, சில சொற்களின் இலக்கண வகைமை, சொல் சொற்றொடர்ப் பிழை திருத்தம், இலக்கியத் தமிழும் செய்தித் தாள் தமிழும், மெய்ப்பாடுகள், திணைமயக்கம், உள்ளுறையும் இறைச்சியும், பொருளியல், யாப்பியல், அணியியல், பின்னிணைப்பு முதலிய இந் நூற்பகுதிகள், பிறபாடப் பொத்தகங்களில் இல்லாத சிறப்புடையனவாய், ஆசிரியரின் பரந்த கல்வியையும், உலக வழக்காராய்ச்சியையும், நீண்ட உழைப்பையும், உண்மையான அறிவை மாணவர்க்கு எளிதாயூட்ட வேண்டுமென்னும் பேரவாவையும், உணர்த்துகின்றன. மாணவர் இந் நூலாற் பயன்பெறுக. பிற ஆசிரியர் ஊக்குக. | | உண்மைத் தமிழறிவை யொண்மதி யில்லாரும் எண்மை வழியெய்தற் கேற்றவகை-வண்மையதாய் எந்தொரு குற்றமும் இல்லா எழில்நடைத்தே செந்தமிழ் நூலெனச் செப்பு. | 28.6.1964 | | |
|
|