பக்கம் எண் :

மதிப்புரை மாலை135

தமிழன் எங்கே?

(தென்புலோலியூர் மு.கணபதிப் பிள்ளை)    

     எகித்தியம், சுமேரியம், பாபிலோனியம், யூதம், கிரேக்கம், உரோ மானியம் முதலிய பண்டை நாகரிகங்கட்கெல்லாம் முந்தியதாயும் அடிப் படையாயும், இன்று அறிவியற் குன்றேறி நிற்கும் மேலைநாடுகளும் இருண்டிருந்த நிலையில் தெருண்டு நின்றதாயும் உள்ள உலக முதல் நாகரிகத்தையும் பண்பாட்டையும் கண்டு அவற்றைப் பல திசையும் பரப்பிய ஒப்புயர்வற்ற தமிழன் எங்கே?

     அந்தோ! வந்தேறிகளால் மயக்குண்டு, மணவுறவும் உணவுறவும் அற்ற பல்வேறு சின்னஞ்சிறு பகுதிகளாகச் சிதைக்கப்பட்டு, ஒற்றுமை யிழந்து, மேன்மேலும் வெவ்வேறு அயலார்க் கடிமைப்பட்டுத் தம் முன்னோரின் பெருமையை முற்றும் மறந்து, நாடிழந்து நகரிழந்து நூலிழந்து சொல்லிழந்து, மறமான மதிகெட்டுத் தாய்நாட்டில் உரிமை யின்றிப் பெரும்பாலும் தற்குறிகளாய் உடலோடு கூடி நிற்கும் தமிழருக் கும் விடுதலையுண்டோ வென்று கவன்று கலங்கும் நிலையில், அவர்க்கு மயக்கந் தெளிவித்து மதிகூட்டும் மருந்தாக, இலங்கை அரசியல் மொழி பெயர்ப்பாளர், தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள 'தமிழன் எங்கே?' என்னும் தமிழ் வரலாற்றாராய்ச்சி நூல் எழுந்து இன்காற்று வீசுகின்றது.
     இந் நூலில், தமிழன் பிறந்தகமாகிய 'இலெமூரியா' (Lemuria) என்னும் குமரி நாட்டு வரலாறும், இலங்கை அதன் எஞ்சிய பகுதியென் பதும், யாழ்ப்பாணம் என்னும் பெயர் வந்த வகையும், அங்கு வழங்கும் சில பழமையான தமிழ் வழக்காறுகளும் பிறவும் சொல்லப்பெற்றுள்ளன.
1. பனாட்டு
  "பனையின் முன்னர் அட்டுவரு காலை
நிலையின் றாகும் ஐயென் உயிரே
ஆகாரம் வருதல் ஆவயி னான"

(தொல். எழு. 284)

     'பனை' என்னும் நிலைமொழியின் முன் 'அட்டு' என்னும் வரு மொழிவரின், முன்னதன் ஐகாரம் கெட்டு அவ்விடத்து ஆகாரம் வந்தேறிப் 'பனாட்டு' என்று முடியும் என்பது, இந் நூற்பாவின் பொருள்.
     'பனாட்டு' என்பது, இற்றைத் தமிழ்ப்பெரு நிலத்தில் சொல்லளவி லாயினும் பொருளவிலாயினும் எங்கேனும் வழக்கிலில்லை. அது பனங் கருப்புக்கட்டிக்குப் பண்டைக் காலத்து வழங்கிய சொல்லாயிருக்கலா மென்று சிலர் உன்னிப்பாய்க் கூறினர். ஆயின், அது அஃதன்றென்பது, 'தமிழன் எங்கே?' என்னும் நூலால் தெரியவருகின்றது.
     "பனம்பழத்தை எடுத்து உரித்து, புளிங்காடி விட்டுப் பிசைந்து, களியாகப் பாயில் ஊற்றி, வெயிலிற் காயவிட்டு தயாரிக்கப்படுவது; தோற்றத்தில் சொக்கிலேற்றைப் (Chocolate) போன்றதாயிருக்கும்" என்று இந் நூலாசிரியர்கூறுகின்றார். (பக். 49,50)