பக்கம் எண் :

136தமிழ் வளம்

     இதனால், மேனாட்டார் போன்றே பல அரிய உண்பொருட் களைப் பண்டைத் தமிழர் உருவாக்கினர் என்பதும், அவற்றுட் பல இற்றைத் தமிழகத்தில் வழக்கிறந்தன என்பதும் பெறப்படுகின்றன.

2. அத்துச் சாரியை
  "பனியென வருஉங் காலவேற் றுமைக்(கு)
அத்தும் இன்னும் சாரியை யாகும்."

(தொல். எழுத். 241)

  "மழையென் கிளவி வளியியல் நிலையும்."

(தொல். எழுத். 187)

  "வெயிலென கிளவி மழையியல் நிலையும்."

(தொல். எழுத். 378)

     இந் நூற்பாக்கள், 'பனி', 'மழை', 'வெயில்' என்னும் சொற்கள் வேற்றுமைப் புணர்ச்சியில், 'பனியத்துச் சென்றான்', 'மழையத்துச் சென்றான்', 'வெயிலத்துச் சென்றான்' என அத்துச் சாரியை பெறும் எனக் கூறுகின்றன.    
     இத்தகைய வழக்கு இற்றைத் தமிழநாடாகிய சோழ பாண்டிய நாடுகளிலில்லாவிடினும், பழஞ் சேரநாடாகிய மலையாள நாட்டில் இன்றுமுள்ளது. 'பனியத்துப் போகருதெ', 'மழையத்துப் போகருதெ', 'வெயிலத்துப் போகருதெ' என்பன போன்ற வழக்குகள் அங்கு இன்னும் இயல்பாகவுள்ளன. ('போகருதெ' என்பது 'போகாதே' என்னும் எதிர்மறை யேவலின் மறுவடிவம்.)
     இதுவரை, இவ் வழக்கு மலையாள நாட்டிற்கே சிறப்பெனக் கருதியிருந்தோம். ஆயின், திரு. மு. கணபதிப்பிள்ளை அவர்கள் இது யாழ்ப்பாணத்திலு முள்ளதெனத் தெரிவிக்கின்றார்கள்.
     "பண்டு தொட்டுத் தூய தமிழ் வழங்கும் இலங்கையின் வடபாகத் திலே - சிறப்பாக யாழ்ப்பாணப் பகுதியிலே இவ் வழக்கு உள்ளது. நோயினாற் பீடிக்கப் பட்டவர்களையோ குழந்தைகளையோ வெயிலிலும் மழையிலும் போகாது தடுப்பவர்கள் இவ் வழக்கினைக் கையாளுதல் உண்டு. வெயிலத்துப் போகக் கூடாது. மழையத்துப் போகக்கூடாது எனக் கூறுவது யாழ்ப்பாணத் தமிழர் காதுக்கும் அந்நியமாகத் தோன்றவில்லை." (பக். 47) என்பது அவர்கள் கூற்று.
     இனி, ஆசிரியர் 'மூ', 'எழு' என்னும் எண்ணுப் பெயரெச்சங்களை நாட்டுப் பெயராகக் கொள்ளும் புதுக் கருத்து, கருத்து வேறுபாட்டிற் கிடமானது.
     இந் நூலின் பொதுப் போக்கு. உணர்ச்சியற்றுத் தூங்கிக் கிடக்கும் தமிழனைத் தட்டியெழுப்பி,
  'ஆரிய வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தமிழினில் உணர்த்தவிட்
டன்னிய மின்மையின் அரசினை யுறுமே'
என அறிவித்து ஆற்றுப்படுத்துவதா யுள்ளது. ஆதலின், தமிழர் யாவரும் இதனை வாங்கிப் படித்துப் பயன் பெறுக.

- 1966