பக்கம் எண் :

மதிப்புரை மாலை137

தமிழ் நூல்
(த. ச. தமிழன்)
     திருவாரூர் இயற்றமிழ்ப் பயிற்றகத்தின் தமிழாசிரியர் புலவர் த. சரவணத் தமிழனார் இயற்றிய பொதுமுறைத் தமிழிலக்கண நூலைப் பார்வையிட்டேன்.
     ஆசிரியர் நூலை எழுத்தியல், சொல்லியல், உறுப்பியல், புணரியல், பொதுவியல், ஒழிபியல், தொடரியல் என ஏழியல்களாகப் பகுத்து, இக்கால மாணவர் தமிழைப் பிழையறப் பேசுதற்கும், எழுதுதற்கும் இன்றியமையாத இலக்கணங் களையெல்லாம் 433 நூற்பாவாலும் அவற்றின் உரையாலும் விளக்கி யிருக்கின்றார்.
     இலக்கணவிளக்க நூலாசிரியரும் இலக்கணக்கொத்து நூலாசிரிய ரும் போல ஆசிரியரே உரை வரைந்திருப்பதால், மூலத்தின் உண்மைப் பொருளைப் பிறழ உணர்ந்து பல்வேறு உரைகள் தோன்றி மாணவரை மயக்கற்கு இடனின்றாம்.
     சொற்களின் திரிவு முறைகளையும் மரூஉக்களின் மூலத்தையும் காட்டலும், நிறுத்தக்குறியிலக்கணத்தை நூற்பாவிலமைத்தலும், தமிழின் தூய்மையைப் போற்றலும், குலமதகட்சிச் சார்பின்றிப் புலமையைப் பாராட்டலும், இந் நூலின் சிறப்புக் கூறுகளாம்.
     வடமொழியெழுத்துத் திரிபைக் கூறும்பகுதி, தமிழின் தூய்மை யைப் போற்றலொடு முரண்படுதலின், அது கொள்ளத்தக்க தன்று. தமிழெழுத்து வரிவடிவு மாற்றமும் தமிழுக்குத் தேவையில்லை.
  "கரையாடக் கெண்டை கயத்தாட மஞ்ஞை
சுரையாழ அம்மி மிதப்ப-வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை."
     என்னும் பழைய நேரிசை வெண்பாவை, பிறரெல்லாம் முதலடி யின்றிச் சிந்தியல் வெண்பாவாகவே காட்டுவர். இந்நூலாசிரியர் அதன் முழுவடிவையும் வரைந்திருப்பது பாராட்டத்தக்கது. ஆயின் அதைப் பாடியவரின் கருத்து, கொடுங்கோல் மன்னனின் அல்லது ஆட்சி முறையறியா அரசனின் நாட்டு வாழ்க்கையின் தாறுமாறான நிலைமையை உணர்த்துவதேயன்றி, மொழிமாற்றுப் பொருள்கோட்கு எடுத்துக்காட் டமைப்பதன்று என்பதை அறிதல் வேண்டும்.
     வடசொற்களின் மொழிபெயர்ப்பாகக் கொண்டவற்றுள், ஒன்றி ரண்டை மாற்றிக்கொள்வது நன்றாம். எ-டு : நிருபர்-மடலர். இது அறிக்கையாளர் என்றிருப்பின் மிகப் பொருத்தமாம். ஒரு சில மரூஉக்களின் மூலவடிவும் மாற்றப்படல் வேண்டும்.
     பொதுவாக, சில நற்கூறுகளைப் புதுவதாகவும், துணிச்சலாகவும் கையாண்ட இந் நூலாசிரியரை ஊக்குவது தக்கதாம். அடுத்த பதிப்பு முற்றுந் திருந்திய
முறையில் வெளிவருமென்று நம்புகின்றேன்.

9.4.1972