பக்கம் எண் :

148தமிழ் வளம்

குறையாமையும், கோவலன் கொடுமைகளையெல்லாம் ஓருருவாக்கி அவன்முன் கொணர்ந்து நிறுத்தின. அவன் கரையில்லாக் கழிவிரக்கங் கொண்டு, அவளை ஆற்றித் தேற்றுமாறு.
     "மையீ ரோதியை வருகெனப் பொருந்திக்
கல்லத ரத்தங் கடக்க யாவதும்
வல்லுந கொல்லோ மடந்தைமெல் லடியென
வெம்முனை யருஞ்சுரம் போந்ததற் கிரங்கி
     ............................................................................
சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்
வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கீண்
டெழுகென வெழுந்தா யென்செய் தனையெனப்"
     புலம்பி உள்ளமழிந்தான். இவ் வமையத்தில் "சிறு முதுக்குறைவி" எவ்வகையிலும் எள்ளளவும் ஏனை யொருத்தியைக் குறியாதென்பது தெளிதரு தேற்றம்.
ஆ. வேலாயுதம், கொழும்பு - 6.    
     * தங்களால் எழுதப்பட்ட நூல்கள் எவை? அவற்றை எங்குப் பெற்றுக் கொள்ளலாம்?
     கட்டுரை வரைவியல், உயர்தரக் கட்டுரை யிலக்கணம் (2 பாகம்), சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள், திரவிடத்தாய், முதற்றாய்மொழி, பழந் தமிழாட்சி, தமிழ்நாட்டு விளையாட்டுகள், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு, தமிழர் திருமணம் முதலியன. இவை, அப்பர் அச்சகம், 2/140, பிராடுவே சென்னை-1 என்ற முகவரி கொண்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற் கிடைக்கும். அங்குப் பெற்றுக்கொள்க.
     * தமிழரின் பொற்காலம் எது?
     தனித்தமிழே தழைத்தோங்கியதும், முத்தமிழிலக்கண விலக்கியங் களும் பல்கலை நூல்களும் முற்ற வழங்கியதும், வறுமை யறியப்படாதி ருந்ததும், பிறப்பால், சிறப்பில்லாதிருந்ததும், ஆரியத் தொடர்பு அணு வளவுமில்லாததுமான, (குமரிக் கண்டத் தென் மதுரைத்) தலைக் கழகக் காலமே தமிழரின் பொற்காலம்.
     * தமிழகத்தில் தோன்றிய ஒளவையார்கள் எத்தனைப் பேர்? எந்தெந்தக் காலங்களில் வாழ்ந்தனர்?
     இற்றை யிலக்கியத்தால் தெளிவா யறியப்பட்ட ஒளவையார் இருவர். ஒருவர் கடைக் கழகக் காலத்தவர் (கி.பி. 2ஆம் நூற்றாண்டு). இன்னொருவர் 12ஆம் நூற்றாண்டினர். வான்கோழி இந் நாட்டிற்குப் பதினாறாம் நூற்றாண்டிற் கொண்டுவரப்பட்டதாயின், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை ஆகிய அற நூல்களை இயற்றிய வரை 16ஆம் அல்லது 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த 3ஆம் ஒளவையா ராகக் கொள்ளவும் இடமுண்டு.