பக்கம் எண் :

கேள்விச் செல்வம்151

யுள்ளதென்றும், மாந்தன் வாழ்நாள் குறுகியுள்ள இக் காலத்திற்கு இரு மொழிக் கொள்கையே ஏற்குமென்றும், அறிந்துகொள்க.
செ. பாண்டியன், கோவை - 2.
     * தமிழ் ஒலிக் குறியீடுகளில் தேவைப்படுங்கால் வடமொழி யெழுத்துகளான ஜ், ஹ், ஸ், ஷ் முதலியவற்றையும்; ஆங்கில எழுத்துகளான J, F, H, G முதலிய வற்றையும், எழுதிக்காட்ட என்ன முறையைக் கையாள வேண்டும்? நம் எழுத் தமைப்பில் ஏதாவது மாற்றம் செய்து கொள்ளலாமா? அவ்வாறாயின், அம் முறையைத் தென்மொழியில் எழுதுவீர்களா?
     ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வோர் ஒலித்தொகுதியுண்டு. எல்லா மொழிகட்கும் பொதுவான ஒலிகள் ஏறத்தாழ இருபத்தைந்தே. பெருமொழிகளுள் மிகக் குறைந்த ஒலிகளுள்ளவை தமிழும், மிக நிறைந்த ஒலிகளுள்ளது வடமொழியுமாகும். தமிழின் அடிப்படை யொலிகள் முப்பது. வடமொழி யொலிகள் நாற்பத் தெட்டு முதல் ஐம்பத்து மூன்றுவரை பலவாறு சொல்லப்பெறும்.
     ஒவ்வொரு பெரு மொழிக்கும் சில சிறப்பொலிகளுள. மொழிக ளெல்லாம் வல்லியல், மெல்லியல் என இருதிறப்படும். அவற்றுள், வல்லியன் மொழிகள் ஏனை மொழிச் சிறப்பொலிகளுட் பெரும்பாலன வற்றை ஏற்குந் திறத்தன. மெல்லியன் மொழியோ அத் திறத்ததன்று. தமிழ், மெல்லியன் மொழிகளுள் தலை சிறந்தது. ஆதலால், பிறமொழி வல்லொலிகளை ஏற்காது. மெல்லொலியுடன் வல்லொலியை இணைப்பது. மெல்லிய மல்லாடையுடன் வல்லிய கம்பளியை இணைப்பது போன்றதே. ஆடவர் பெண்டிர் மேனிகள்போல், வல்லியன் மொழிகளும் மெல்லியன் மொழிகளும் என்றும் வேறுபட்டேயிருக்கும். தமிழில் வல்லொலிகள் கலப்பின் அதன் தன்மை முற்றும் மாறிவிடும். அதன்பின் அது தமிழாகாது.
     தமிழின் மென்மையை யுணர்ந்தே, கி.மு. 6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டினரான தொல்காப்பியர் தமிழ்ச் செய்யுட்கு வடசொல்லை வேண்டாது வகுத்த விடத்தும்,
     "வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"

(884)

என்று வடவெழுத்தை விலக்குவாராயினர்.    
     இனி, 12ஆம் நூற்றாண்டில்,
     "இடையில் நான்கும் ஈற்றி லிரண்டும்
அல்லா அச்சை வருக்க முதலீறு
யவ்வாதி நான்மை ளவ்வாகும் ஐயைம்
பொதுவெழுத் தொழிந்த நாலேழுந் திரியும்"

(146)

என்று வடசொற்கள் பெருவாரியாய்த் தமிழில் வந்து வழங்கு வதற்கு வழி வகுத்த பவணந்தியாரும்.