| "ஏழாமுயி ரிய்யும் இருவும்ஐ வருக்கத்து இடையில் மூன்றும் அவ்வம் முதலும் எட்டே யவ்வும் முப்பது சயவும் மேலொன்று சடவும் இரண்டு சதவும் மூன்றே யகவும் ஐந்திரு கவ்வும் ஆவீ றையும் ஈயீ றிகரமும்" | (147) |
| "ரவ்விற் கம்முத லாமுக் குறிலும் லவ்விற் கிம்முத லிரண்டும் யவ்விற்கு இய்யும் மொழிமுத லாகிமுன் வருமே." | (148) |
| "இணைந்தியல் காலை யரலக் கிகரமும் மவ்வக் குகரமும் நகரக் ககரமும் மிசைவரும் ரவ்வழி உவ்வும் ஆம்பிற." | (149) |
எனத் தமிழியற் கொத்தவாறே வடவொலிகளைத் திரிக்க உடன்பட்டார். |
19ஆம் நூற்றாண்டில் தக்க புலவரும், புரவலரும் இன்மையால், தமிழ் உரை நடையிலும் செய்யுளிலும் வடசொற்களுடன் வடவெழுத்து களும் தாராளமாய் வந்து கலந்துவிட்டன. அவற்றையெல்லாம் நிறை தமிழ் வாணரான மறைமலையடிகள் களைந்தெறிந்தார். |
ஒரு தமிழ்ப் பேரறிஞர் ஆய்த வெழுத்தினியல்பைப் பிறழ வுணர்ந்து, அதனைக்கொண்டு ஆரிய வொலிகளையெல்லாம் தமிழிற் குறிக்க வொண்ணு மென்றும், அதற்காகவே அது தமிழ் நெடுங்கணக்கில் வகுக்கப்பட்டதென்றும் கருதினார். அஃதாயின் தமிழ் ஒரு வல்லியன் மொழியாயும் அதன் நெடுங் கணக்கு ஆரிய மொழிகளெல்லாம் தோன் றியபின் ஏற்பட்டதாயுமிருத்தல் வேண்டும். தமிழின் தொன்மையும் முன்மையும் மென்மையும் அக் கொள்கைக்கு முற்றும் மாறாயுள்ளமை காண்க. |
ஆய்தம் என்பது ஒரு வகை நுண்ணிய ககரவொலியே யன்றி வேறன்று. ஆய்தல் - நுண்ணியதாதல். |
| "ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்" | (813) |
என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க. |
ஆய்த வொலியைப் பிறழ வுணர்ந்தும், ஒலி வடிவிற்கும் வரிவடி விற்கும் இயைபின்மையை அறியாதும், ஆய்த வரிவடிவைத் துணை கொண்டு F, Z போன்ற ஆங்கில வொலிகளைச் சிலர் தமிழிற் குறித்து வருகின்றனர். எழுத் தென்பது உண்மையில் ஒலியேயன்றி வரியன்று. தமிழ் வரிவடிவால் ஓர் அயலொலியை இடர்ப்பட்டுக் குறிக்க முயல்வதினும், அவ் வொலிக்குரிய அயன் மொழி வரிவடிவையே தழுவுவது நன்றாயிருக்குமே! ஓர் ஒலியைத் தழுவும்போது ஏன் அதன் வரியைத் தழுவுதல் கூடாது? ஆங்கிலம் உலக மொழிகளெல்லா |