பக்கம் எண் :

கேள்விச் செல்வம்153

வற்றினின்றும் சொற்களைக் கடன் கொண்டிருந்தும், அவற்றை யெல்லாம் தன்னொலியாலும் தன் வரியாலுமன்றோ இன்றும் குறித்து வருகின்றது.
     மொழியென்பது ஒலித் தொகுதியேயன்றி வரித் தொகுதியன்று. வரி மாறலாம், ஒலி மாறாது. ஒலி மாறின் மொழி மாறி விடும். செவிப்புலனாய வொலியைக் கட்புலனாக்குங் குறியே வரியாம்.
     முதலில் வடசொற்களையும் பின்பு வட வெழுத்துகளையும் ஒவ்வொன்றாகப் புகுத்துவதையே, கொடுந்தமிழ் மொழிகளை ஆரிய வண்ணமான திரவிடமாக்கும் வழியாக, தொன்றுதொட்டு வட மொழி யாளர் கையாண்டு வந்திருக்கின்றனர். சேர நாட்டுச் செந்தமிழ் சோழ பாண்டி நாட்டொடு தொடர்பற்றுக் கொடுந் தமிழாகிப் பின்பு, ஆரியச் சேர்க்கையால் மலையாளம் அல்லது கேரளம் என்னும் திரவிட மொழியாகத் திரிந்துள்ளமை காண்க. கொடுந்தமிழ்களை முன்னர் ஆரிய வண்ணமாக்கியது போன்றே, இன்று செந்தமிழையும் ஆக்க முயன்று வருகின்றனர். அதனொடு ஆங்கில எழுத்துகளும் சொற்களும் சேரின், தமிழ் விரைந்து அழிந்து போவது திண்ணம். அரசன், நகைச்சுவை, பொத்தகம் அல்லது சுவடி, பூ, பறவை என்னும் தென் சொற்களிருக்க, அவற்றிற்கு மாறாக ஏன் ராஜன், ஹாஸ்ய ரசம், புஸ்தகம், புஷ்பம், பக்ஷி என்னும் வட சொற்களையும் வட சொல் வடிவங்களையும் தழுவ வேண்டும்?
     இயற்கை யொலிகளும் செயற்கை யொலிகளும் மிகுந்து நெடுங் கணக்கு நீண்ட வடமொழியுள்ளும், எ, ஒ என்ற உயிர்க் குறில்களும், ள, ழ, ற, ன என்னும் மெய்யெழுத்துகளும் ஆகிய தமிழொலிகளும், F, Z என்னும் ஆங்கிலவொலிகளும், சில அரபியொலிகளுமில்லை. ஆகவே, ஒவ்வொரு மொழிக்கும் சில சிறப்பொலிகளுள. அவற்றை யெல்லாம் தழுவுவது ஆங்கிலமாகிய உலக மொழி ஒன்றற்கே தகும். எல்லா மொழிகளும் தழுவ வேண்டியதில்லை; தழுவின், எல்லாம் தத்தம் தனித் தன்மையிழந்து ஒன்றாகிவிடும்.
     ஒரு மொழியின் வளம் அல்லது வலிமை அதன் சொற்களா லாயது. பொருள்தரும் சொல்லிற்கு உறுப்பாகும் ஒலியே எழுத்தாம். அது தன்னளவிற் பொருள் தராது. அதனாலாகும் சொல்லே பொருள் தருவது. குமரிக் கண்டத் தமிழர், முப்பதொலிகளைக் கொண்டே, அக் காலத்து மாந்தருள்ளத்திலெழுந்த கருத்துகளைக் குறிக்குஞ் சொற்களையும், பிற்காலத்திலெழுங் கருத்துகளை குறித்தற்கேற்ற சொற்கருவிகளையும், அமைத்துச் சென்றனர். ஆதலால், ஒலிக் குறைவினால் தமிழிற்கு ஏதும் மொழிக்குறைவில்லை. ஆயிரங் காய்ச்சியான தென்னைக்கு ஓலைக் குறைவினால் ஒரு குறைவுமில்லை அழகிய சொல்வள மிக்க தமிழுக்கு ஒலிக் குறைவினால் ஒரு குறைவுமில்லை. ஒவ்வொன்றும் அதனதன் இயல்பில் நின்றே வளர்தல் வேண்டும். ஆதலால், தமிழுக்கு எவ்வகையிலும் எழுத்து மாற்றம் தேவையின்றென அறைக. அது தமிழுக்கு இறுதி விளைக்குமென்றே மறைமலையடிகளும் விடுத்தனர். அதுவே உறுதியென்று கடைப்பிடிக்க.