பக்கம் எண் :

154தமிழ் வளம்

28
ஈ.வே.இரா. பெரியாருக்கு விடுத்த வெளிப்படை வேண்டுகோள்
(தமிழ்நாட்டுத் தந்தை ஈ.வே.இரா.பெரியார் அவர்கட்கு
ஞா.தேவநேயன் எழுதுவது: வேண்டுகோள்.)

அன்பார்ந்த ஐய,
     வணக்கம்,
     தாங்கள் இதுவரை அரை நூற்றாண்டாகக் குமுகாய (சமுதாய)த் துறையிலும் மதத்துறையிலும் தமிழ்நாட்டிற்குச் செய்துவந்த அரும் பெருந் தொண்டு அனைவரும் அறிந்ததே. ஆயின், மொழித்துறையில் ஒன்றும் செய்யவில்லை. ஒரு நாட்டு மக்கள் முன்னேறும் ஒரேவழி அவர் தாய்மொழியே. ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி தாங்களே ஒன்று நிறுவினீர்கள். ஆங்கிலக் கலைக்கல்லூரி ஒன்றிற்கு ஐந்திலக்கம் உருபா மானியமாக உதவினீர்கள். இந் நாட்டு மொழியாகிய தமிழை வளர்க்க ஒரு கல்லூரியும் நிறுவவில்லை.
     ஆதலால், தங்கள் பெயர் என்றும் மறையாமலும் தங்கள் தொண்டின் பயன் சிறிதும் குறையாமலும் இருத்தற்குக் கீழ்க்காணுமாறு பெரியார் தன்மானப் பகுத்தறிவுப் பல்கலைக்கழகம் எனச் சென்னையில் ஒரு கல்வி நிறுவனம் இயன்ற விரைவில் நிறுவுமாறு தங்களை வேண்டுகின்றேன்.

திட்டம்

     தமிழையும் அதன் வழிப்பட்ட மலையாளம், கன்னடம், தெலுங்கு, குடகு, துளு, கோத்தம், தோடம், கோலாமி, நாய்க்கி, பர்சி, கடபா, கோண்டி, கொண்டா, கூய், குவீ, குருக்கு, மாலத்தோ, பிராகுவீ என்னும் பதினெண் திரவிட மொழிகளையும் தமிழ் வாயிலாகவும் ஆங்கில வாயிலாகவும் கற்பித்தல்.
     மதம் கற்பிக்கப்படாது. கடவுள் வாழ்த்துப் பாடப்பெறாது. அதற்கீடாகப் பெரியார் வாழ்த்து அல்லது புகழே பாடப்படும். கல்லூரி நடப்பிற்குரிய சட்ட திட்டங்களைத் தாங்களே அமைத்துத் தரலாம்.

ஆசிரியர் குழு

     முதல்வர் : பேரா. தி.வை. சொக்கப்பா எம்.ஏ., எல்.தி.,
     தமிழ்ப் பேராசிரியர்: ஞா. தேவநேயன்.