பக்கம் எண் :

ஈ.வே.இரா. பெரியாருக்கு விடுத்த வெளிப்படை வேண்டுகோள்155

     துணைவர் : தமிழ் மறவர் வை. பொன்னம்பலனார். பிறமொழி கட்குத் தகுந்த ஆசிரியர் விளம்பரம் செய்து அமர்த்தப் பெறுவர்.

மாணவர்

     பள்ளியிறுதி அல்லது அதற்குச் சமமான தேர்வு முதல் வகுப்பில் தேறிய ஐம்பதின்மர் குல மத கட்சி யின நாடு வேறுபாடின்றித் தெரிந்தெடுக்கப் பெறுவர்.

     வெளியூர் மாணவர்க்கும் வெளிநாட்டு மாணவர்க்கும் உண்ணவும் தங்கவும் விடுதி யிருக்கும்.

     கல்விக் கட்டணமும் விடுதிக் கட்டணமும் பின்னர்த் தெரிவிக்கப் படும்.

மானியம்

     சென்னையில் சூழ்நிலத்தொடு கூடிய மாளிகையொன்றும் ஐந்திலக்கம் உருபாவும்.

கடவை (Course)

     இலக்கணம், இலக்கியம், மொழிநூல், ஏரணம் (Logic), இசை, நாடகம் என்னும் ஆறும் ஐந்தாண்டு கற்பிக்கப்பெறும். ஆங்கிலம், அறிவியல் இவற்றோடு பெரியாரியல் (Periyarism) என்ற பகுத்தறிவுக் கொள்கையும் கற்பிக்கப்பெறும்.

     பாடத்திட்டம் பின்னர் வகுக்கப்பெறும்.

பயன்

     தமிழ் வடமொழியினின்று மீட்கப்பெற்றுத் தூயநடையில் கற்பிக்கவும் உலக முழுவதும் பரப்பவும் பெறும்.

     தமிழரும் திரவிடரும் ஆரிய அடிமைத்தனம் அடியோடு நீக்கி முன்னேற்றப் பாதையில் அடியிட்டு விரைந்து நடப்பர்.

     ஐயாட்டைக் கடவை முடித்துப் பட்டம் பெற்ற மாணவர் உள்நாட் டிலும் வெளிநாட்டிலும் மொழியாசிரியரும் மொழிநூலாசிரியரும் இசை யாசிரியரும் நாடக வாசிரியருமாகப் பணியாற்றும் வாய்ப்புப் பெறுவர்.

அன்பன்
ஞா. தேவநேயன்

     குறிப்பு : திருவள்ளுவராண்டு 2000 ஆடவை 13ஆம் பக்கல் (25.6.1969) அன்று இதன் சுருக்கம் வேலூர் நகரசபைத் தலைவர் திரு. மா. பா. சாரதி அவர்களின் தம்பி மகன் திரு. அன்பழகன் திருமண விழாவிற்குத் தலைமை தாங்கிய பெரியார் அவர்களிடம் என்னால் நேரிற் கொடுக்கப்பெற்றது. இன்னும் மறுமொழியில்லை.

- தென்மொழி