பக்கம் எண் :

உலகத் தமிழ்க் கழகக் கொள்கை65

  14. அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களி லெல்லாம் தமிழுக்குப் பேராசிரியப் பதவி யேற்படல்.
  15. கானா, பிரனீசு மலைநாடு முதலிய நாடுகட்கு ஆராய்ச்சி யாளரையனுப்பி, அங்கத்து மொழிகளிலுள்ள தமிழ்ச் சொற் களைத் தொகுப்பித்தல்.
  16. இந்திய ஆட்சியின் இந்தித் தொடர்பு அடியோடு நீக்கப் பெறல்.
     இவையெல்லாம் நிகழுங் காலமே தமிழாட்சிக் காலமாகும். ஒரு சில தமிழர்க்கு உயர்பதவி கிட்டியவுடன் தமிழாட்சி வந்ததாகக் கருதுவது அறியாமையின்பாற் பட்டதே.
     தமிழாய்ந்த தமிழனே தமிழ்நாட்டு முதலமைச்சனாதல் வேண்டு மென்று புரட்சிப் பாவேந்தர் கொண்ட வேணவா இன்னும் நிறைவேற வில்லை. மறைமலையடிகள் வழிச்சென்று மாபெரும் பாடுபட்டு தமிழின் தூய்மையைக் காக்கும் ஒரேயொரு தொண்டனுக்கும். ஓர் ஆராய்ச்சிப் பதவி யளித்துதவ மனமின்றி, அகவை மிகையென்று தட்டிக்கழித்த ஒரு முதலமைச்சர் எங்ஙனம் தமிழாய்ந்த தமிழனா யிருக்கமுடியும்? சிறந்த ஆராய்ச்சியாளனுக்கு மூப்பும் ஒரு தகுதி என்பதை, அவர் அறிந்திருந்தும் அறியாதவர்போல் நடித்தது மிக மிக இரங்கத்தக்கதே.
     இனி, தண்டவாளத்தின்மேல் தலைவைப்பது மட்டும் தமிழ்ப் பற் றையோ தலைமைத் தகுதியையோ காட்டிவிடாது. வண்டிவராத வேளை யும், நூற்றுக் கணக்கான நண்பர் அண்டிச் சூழ்ந்து நிற்கும் போதும், ஓட்டுநர் வண்டியை மேற்செலுத்தாரென்று திட்டமாய்த் தெரிந்த பின்பும், எவரும் தண்டவாளத்தின் மேல் தலையும் வைக்கலாம்; ஒரு தூக்கமுந் தூங்கலாம். மேலும், எடிசன், சர்ச்சில், மறைமலையடிகள், திங்கட்செலவி னர் போன்ற புதுப்புனைவாளரும் ஆள்வினைத் தலை வரும் பேரறிஞ ரும் அருஞ்செயன் மறவரும், தண்டவாளத்தின்மேல் தலை வைப்பது மில்லை; என்றேனும் வைக்கக் கருதுவதுமில்லை. ஆதலால், சிறுவருஞ் செய்யக்கூடிய அச் சிறுசெயல் பெரியோரின் பெருமைக்குச் சான்றாகாது. அறிவு, ஆராய்ச்சி, சொல்வன்மை, அன்பு, தொண்டு, நடுநிலை, குடிசெயல், தாளாண்மை, ஆள்வினைத்திறம், தறுகண்மை, ஈகைத்தன்மை, தன்மானம், பரந்த நோக்கு, பெருந்தன்மை முதலிய பண்பாட்டுக் குணங்களையே ஒருவர் பெருமைக்கும் தலைமைக்கும் சான்றாக எடுத்துக்காட்டல் வேண்டும்.
     ஒரு நாடு முன்னேறுவதற்கு மொழியே வழியாம். தமிழ் தாழ்த்தப் பட்டதே தமிழன் தாழ்ந்ததற்குக் கரணியம். தமிழன் உயர்வடைய வேண்டு மாயின், தமிழ் மீண்டும் குமரிநாட்டிற்போல் தழைத்தோங்க வேண்டும். தமிழ் என்பது தனித் தமிழே; திரைப்பட மொழியன்று. தமிழைப் போற்றா தவன் தமிழனல்லன். தமிழை அழிக்க விரும்புபவர் பேராயத்தார்போல் தாமே அழிந்து போவர். ஆதலால், தமிழ் மீண்டும் அரியணையேறு வதுபற்றி ஐயுறவேண்டா. தி.க.விலிருந்து தி.மு.க. தோன்றியது போன்றே தி.மு.க.விலிருந்து நாளடைவில் த.த.க. (தனித்தமிழ்க் கழகம்) தோன்றும். அன்றே தமிழாட்சி தொடங்கி உலகுள்ளவும் நிலைத்து நிற்கும்.
     உலகத் தமிழ்க் கழகம் கையாளும் குறிக்கோட் பண்புகள் எண்மை எளிமை(simplicity), உண்மை (sincerity) தன்னலமின்மை (selflessness) தொண்டு (service), ஈகம் (sacrifice) என்னும் ஐந்தாகும்.