பக்கம் எண் :

பதவி விடுகையும் புத்தமர்த்தமும்67

உ.த.க. நோக்கம்:
     தமிழை வடமொழிப் பிணிப்பினின்று விடுவித்துத் தூய்மையாகப் போற்றி வளர்ப்பதே உ.த.க.வின் ஒரு பெரு நோக்கம்.
     தமிழ் என்பது மொழி. இலக்கியம் பண்பாடு ஆகிய மூன்றையும் தழுவும், வாழ்க்கை முறைக்குத் திருவள்ளுவரும், மொழி நடைக்கு மறைமலையடிகளும் சிறந்த வழிகாட்டிகளாவர்.
     தமிழ் பண்பாட்டிற்கு மாறான கருத்துகள் உ.த.கழகத்தாற் கொள்ளப் பெறா. ஆதலால் தமிழ்ப் பற்றினும், கட்சிப்பற்றோ, மதப் பற்றோ விஞ்சியவர் உ.த.க. உறுப்பினராக இருத்தல் இயலாது.
உ.த.கழக நடப்பு:
     எல்லா ஏந்துகளும் வாய்ப்பின், ஆண்டுதோறும் இறுதிக்காரி, ஞாயிறு ஏதேனுமொரு நகரில் ஆட்டைவிழாவும், இடைக்காலத்தில் தேவை மேற்படின் ஆட்சிக் குழுக்கூட்டம் ஒன்றும், பலவும் நடைபெறும்.
     தனித் தமிழ் வளர்ச்சியையும், மறைமலையடிகள் வழிப்பட்ட தமிழ்ப்புலவர் ஒருவரையுமே அடிப்படையாகக் கொண்டிருக்கும். உ.த.க; வணிகமும், கூட்டுறவும், அரசியலும், மொழியியலும், மதவியலும், குலவியலும், இனவியலும், தொழிலியலும் பற்றிய பிற கழகங்கள்போற் பெரும் பான்மை யுறுப்பினர் ஆட்சிக்குட்படாது, முற்றுந் தலைவர் அதிகாரத் திற்கே உட்பட்டிருக்கும். ஆதலால், துணைத் தலைவர், தலைமைச் செயலாளர், நெறியீட்டுக் குழுவினர் ஆகிய பதவியினரை அமர்த்தும் அதிகாரம் முற்றும் தலைவர்க்கே உண்டு.
     மாவட்டக் கிளைகளை அமைத்து நெறிப்படி நடத்தி வருவதும் அவ்வப்போது கூட்டப் பெறும் ஆட்சிக் குழுக் கூட்டங்கட்குத் தப்பாது வருவதும், ஆட்டை விழா மாநாட்டிற்குப் பணந்தண்டி யனுப்புவதுமே மாவட்ட அமைப்பாளர் அதிகாரச்செயலும் கடமையுமாகும்.
உறுப்பினர் கட்டணம்:
     முன்பு ஆண்டிற்கு ஒரு உருபாவாக விருந்த உறுப்பினர் கட்டணம் பின்பு ஈரு உருபாவாக உயர்த்தப்பட்டதனால், பெரும்பாலும் ஏழை மக் களை உறுப்பினராக கொண்ட சில பல கிளைகள் குலைந்து போய் விட் டதாக ஓரிரு மாவட்ட அமைப்பாளர் எழுதியிருப்பதை ஓரளவு ஒத்துக் கொண்டு பின்வருமாறு கட்டண நெறியீடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
     செல்வநிலையேறியும் பரந்த நோக்கமும், விருப்பமும் உள்ளவர் ஈரு உருபாயும், அஃதியலாதவர் ஒரு உருபாவும் கொடுக்கக் கடவர்.
     இதன் விளைவாக, கலைந்த கிளைகளின் புதுப்பிப்பும் புதுக் கிளைகளின் தோற்றமும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
முதன்மொழி வெளியீடு:
     உ.த.க. உறுப்பினர்க்கு அவ்வப்போது உரிய செய்திகளை அறிவித்தற்கே 'முதன் மொழி' யிதற் தோற்றுவிக்கப்பட்டது. எனவே அதில் வெளியிடப் பெறுகின்ற செய்திகளையே உ.த.க.வின் அதிகார முழுமையான செய்திகளாகக் கருதிக் கொள்ளுமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.