பக்கம் எண் :

10

Untitled Document

6. ஓமந்தூராரிடம் காவடி


குயில், தினசரி, புதுவை. நாள் : 18.9.48, பக்.2-3.


     நேற்றுமுன்,திருவாளர்கள் வக்கீல் பெருமாள்,வக்கீல் வ.இஸ்மாயில்
வக்கீல்   ஞானு   அம்புருவாஸ், மண்ணாடிப்பட்டு  முத்து வேங்கடபதி
ரெட்டியார்  முதலியவர்கள் சென்னை முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி
ரெட்டியாரிடம் சென்றுசில நாட்களில்     பிரஞ்சிந்தியாவில்  நடைபெற
இருக்கும் முனிசிபல்     தேர்தலில் நாங்கள் போட்டியிடப் போகிறோம்.
எங்கட்குப்  பக்கத்   துணையாய்  இருந்து நாங்கள் வெற்றிபெற அருள்
பாலிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்களாம்.

     அதற்கு ஓமந்தூரார் என்ன சொன்னார்? ஓமந்தூரார் சொன்னதாக
இங்குள்ள      காங்கிரஸ்காரரும்,பெருமாள் முதலியவர்களும் பலவாறு
சொல்லி மக்களைஅச்சுறுத்தி வருவது கண்டிக்கத் தக்கதாகும்.

     நேற்று பிரஞ்சிந்திய போலீஸ் திராவிடர் கழகத் தலைவர்  தோழர்
பொன்.     இராமலிங்கம்   அவர்களைக் கண்டு பேசிய பேச்சுக்களும்
அச்சுறுத்தல்களும்   பெருமாளின்         வக்காலத்தாகவே இருந்தன.
சூதலாதன் உறுதியானகொள்கையையும் வெளிப்படையாகக் கூறினாராம்.
‘நான் இந்தியா  யூனியனில் பிரஞ்சிந்தியா உடனடியாகச் சேரவேண்டும்’
என்ற கொள்கையை உடையவன்என்று.

     அருகில்  நடக்க இருக்கும் முனிசிபல்      எலெக்ஷனில் இந்திய
யூனியன் தலையிட்டுக்  கொள்வதில்லை  என்ற   கருத்தில் டில்லியும்,
பாரிசும் முடிவு கட்டியிருப்பதாகஒரு செய்தி சில      நாட்களின் முன்
படித்தோம்.

     இந்த முடிவுக்கு எதிராக      ஓமந்தூரார் பொறுப்பற்ற வகையில்
பெருமாள் கூட்டத்திற்கு ஆதரவு தரும்  வகையில்,அத்து மீறி,   பதில்
சொல்லியிருப்பார் என்றுஎவரேனும் நம்புவார்களா?

     ஓமந்தூரார்  புதுவை, காரைக்கால்,       மாயே, ஏனம் ஆகிய
இடங்களில் தேர்தல் நடக்கும்   போது  ஏராளமான  பட்டாளத்தை -
உடையில்லாமல் . -  ஆயுதத்துடன்   அனுப்பி   வைப்பதாக   உறுதி
கூறியுள்ளார் என்று எங்கும் வாய்ப்பறையடிக்கப்படுகிறது.நேற்று  முதல்
இந்தத்   தப்பட்டை  ஓசை  அதிகமாயிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.