ஓமந்தூரார் இப்படிச் சொல்லியது உண்மையானால்,அவர் செயல் வருந்தத் தக்கதும்,கண்டிக்கத்தக்கதும் ஆகும்.நம் காரைக்கால்,புதுவை மாயே, ஏனம் ஆகிய ஊர் மக்களுக்கு நாம் கூறும் உறுதி,இந்திய யூனியனிலிருந்து ஒரு காக்கை கூட நம் முனிசிப்பல் எலெக்ஷன் காலத்தில் பிரஞ்சிந்திய எல்லையில் வராது. பெருமாள் கூட்டம் தோல்வி மனப்பான்மையுடையது, பலமுறை அரசியல் பதவிகளை அடைய முயன்றும்,அது ஒன்றையும் அடைய முடியாது போயிற்று.மக்கள் ஆதரவு கடுகத்தனையும் அக்கூட்டத்திற்கு இருந்ததில்லை! ஆனால் பெருமாள் கூட்டத்திற்கு எதிராகப் போட்டியிட்டவர்கள முழு வெற்றியடைந்தார்கள்.பிரஞ்சிந்திய மக்கள் ஒரே மனதாக அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.
இப்போது, வேறுபோர்வை தேடிக்கொண்டது பெருமாள் கூட்டம் அதுதான் காங்கிரஸ் வேறு வழியில்லை.
பிரஞ்சிந்தியா எலெக்ஷனில் வெற்றியடையச் சென்னை முதலமைச்சர்,ஆட்கள் அனுப்ப வேண்டும் என்று கோருகிறது பெருமாள் கூட்டம் என்றால் இதைவிட மானக்கேடு பெருமாள் கூட்டத்திற்கு வேறென்ன தேவை.
மக்கள் ஆதரவற்றவர்கள், பதவி ஆசை பிடித்தவர்கள் பரப்பும் பொய் செய்திகளைப் பிரிஞ்சிந்திய மக்கள் நம்பமாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். மீண்டும் ஒரு முறை கூறுகிறோம்.வரும் முனிசிபல் தேர்தலில் வெளி ஆட்கள் நுழைய மாட்டார்கள். |