பக்கம் எண் :

101

Untitled Document

22. இன விளக்கம்


(குயில், குரல் 1, இசை 30, 23.12.1958)


     இனம் என்ற  சொல்,   ஈனல்  என்பதன் முதனிலை திரிந்த தொழிற்
பெயராகிய இன்   என்பது அம்  சாரியை பெற்றது ஆதலின் தொழிற்பெயர்.
பொருள் : ஈன்று தருவது எனப்படுவது.

     இனம்என்பது     நல்வாழ்க்கை   நிலையை    ஈன்று   தருவதாகிய
பண்பாட்டிற்கு ஆனது, தொழிலாகுபெயர். அன்றியும்.

     அப்பண்பாட்டையுடைய   மக்கட்பிரிவை    உணர்த்துங்கால்,  இனம்
இருமடியாகு பெயர் என்பர். எனவே,

     இனம் என்பது   ஒரு   குறிப்பிட்ட பண்பாட்டையும்  ஒரு குறிப்பிட்ட
பண்பாட்டையுடைய மக்கட் பிரிவையும் குறிக்கும்.

     உலகில்   பல இனங்கள் உண்டு அதாவது பல   பண்பாடுகள் உண்டு.
இந்த இனந்தான் இனத்து மக்களை நல்வழிப்படுத்துவது.

     இனம்   என்பதை  உண்டாக்கியது  எது  எனில்   அதுதான் மொழி.
இனவளர்ச்சிக்கு   மொழி  வளர்ச்சியே காரணம். மொழியைப் பிரிந்த இனம்
உயர்வைப் பிரியும்; புகழை இழக்கும்.

     தட்பவெப்ப   நிலையால்  நிலத்தின்   தன்மை வேறுவேறு. அந்தந்த
நிலத்தில் வாழும் மக்களின் மொழியும்  வேறுவேறு.  வேறுபட்ட ஒருநிலத்து
மக்கள் அதாவது வேறுபட்ட  ஒரு மொழியையுடையார்  அவரவர் எல்லைக்
கண் வாழ்ந்துவரும் வரைக்கும்   இனம் என்பது  தோற்றமளிப்பதே இல்லை.
ஓர் எல்லையினர்   ஒரு  மொழியை மற்றோர் எல்லைக்கண் அடிவைக்கும்
போதுதான் இனம் நெஞ்சை உறுத்தும்.

     நாவலந்தீவில் தமிழரே இருந்தனர். இனம் என்ற சொல்லோ, கருத்தோ
தோன்றியதில்லை.   மற்றொரு   மொழியினராகிய   ஆரியர் புகுந்த இனம்
தோற்றமளித்தது.