நேற்று தி.க. கொள்கைகளை ஆதரித்தீர்கள்; நேற்றுச்சொற்பெருக்கு ஆற்றினீர்கள், நேற்றுப் பாடினீர்கள் நாட்டுப்பாட்டு பொங்கல் புதுநாளில் - உங்கள் திருநாளில் என்ன செய்யப் போகின்றீர்கள் சிறப்பாக? மாவட்டத் தலைவர்கட்குக் கூறுகின்றேன். ஒரு மாவட்டத்தில் எங்கும் ஆயிரம் கழகக்கொடி ஏற்றப்படுதல் வேண்டும். ஒரு மாவட்டத்தில் - எங்கும் ஆயிரம் விடுதலைப் பரப்பப்படுதல் வேண்டும். ஒரு மாவட்டத்தில் எங்கும் ஆயிரம் கழக நூற்கள் பரப்பப்படுதல் வேண்டும். ஒரு மாவட்டத்தில் - எங்கும் ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப் படுதல் வேண்டும். இவ்வாறு செய்க! சோம்பல் என்னும் பள்ளத்தைத் தூர்க்க, உள்ளத்திற் காண்க தமிழர் திருநாளில் தரும் பேரின்பத்தை.
|