பக்கம் எண் :

106

Untitled Document


     பெருமைப்படுகின்றனர்.உலகின் நலனுக்கு அந்த நுண்ணறிவுடையாரைப்
பயன்படுத்துவதுண்டா?   எங்கே?  ஒரே நாளில் உலகத்தையழிக்க வழிதேட
அன்றோ முயற்சி   செய்கின்றார்கள்.   திருவுடைய  நாடு மேலும் அருளை
யன்றோ தேட முயலவேண்டும். தன்னாட்டு மக்கள் நன்றாய்  வாழவேண்டும்
அதற்காக எந்த நாட்டையும் எப்படியேனும் தொல்லைப்படுத்தலாம்  என்றால்
அது பெருந்தன்மையாகுமா?

     அறிவுடைய   நாடு   மேலும்   அன்பை  அன்றோ தேடவேண்டும்
நாடுதோறும் நாள்தோறும்  கொள்ளைக்காரப் பசங்களையும், கொலைக்காரப்
பசங்களையும் தூக்கிவிட்டுக் கலகம் செய்வதால் என்ன பயன்?

     ‘ஒன்றுபட்ட நாடுகளின் அவை’  என்று இருக்கிறதாம்!  உலகை அது
அறநெறியில்   செலுத்துகிறதாம்.   எங்கே  செலுத்துகிறது. சின்ன நாட்டுக்கு
மேலும் இன்னல் தேடுவதில் மும்முரப்படுகின்றது.

     உலகம் இன்று   அறமிலாத  அன்பிலாத  தீயர்களிடம் இருக்கின்றது
அது மீட்சியடைதல்   வேண்டும்.  நாம்  மேற்கூறிய ஐந்தொழுக்க நெறியில்
உலகை நிறுத்தவேண்டும். வடவன், தமிழனை இகழ்வானோ? தமிழ்மொழியை
இந்தியால் கொல்ல   எண்ணுவானாம்.   தமிழன் வரலாற்றை மாற்றியமைக்க
எண்ணுவானா? தமிழினத்தைத்  தலைசாய்க்க  முயல்வானா? தமிழ்நாட்டைச்
சுரண்டுவானா?  இத்தனை   கொடுமைகளையும்  வெளிப்படையாக நடத்திக்
கொண்டுதானே இருக்கிறது நேருவின் ஆட்சி.

     தமிழர்களே! தமிழர் திருநாள் இது!  உள்ளுவதெல்லாம்  உயர்வுள்ளல்
வேண்டும்.   ஒன்றுபடவேண்டும்.  பகைவர் இந்நாட்டை விட்டுச் சென்றுபட
வேண்டும்; தமிழ்வாழ   வேண்டும்; தமிழினம் தன் இயற்கை நிலையை எய்த
வேண்டும்.

     தமிழன்     மீண்டால் - தமிழ்நாடு   விடுதலையடைந்தால்  உலகை
நன்னிலைக்கண் நிறுத்த முடியும்.

     வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!!