பக்கம் எண் :

107

Untitled Document

25. களையெடுத்தல் பயிருக்கு நல்லது


(குயில், குரல் 1, இசை 34, 27.1.1959)


     24.1.59 சனியன்று வெளிவந்த விடுதலையில்  பெரியாரின் அறிக்கைக்
கண்டோம். அதில்,

     கழகத்தின்   இன்றைய  நிலைமை நல்ல வளர்ச்சியும் தக்க மதிப்பும்
பெருமக்கள்ஆதரவும் எதிர்பாராத பக்கமிருந்தெல்லாம் உதவியும் பெற்றிருப்
பதாக நான் கருதி மகிழ்ச்சி  அடையவேண்டிய நிலையில் இருந்தாலும் நான்
மேடையில் நின்று பேசும்    நேரம்   தவிர்த்து  மற்ற நேரங்களிலெல்லாம்
துக்கமும், வேதனையும், கவலையும், எதிர்காலத்தில் கழகத்தைப்  பற்றி கழக
வாழ்வை   நடத்தையைப்   பற்றி நல்ல  நம்பிக்கை கொள்வதற்கு இல்லாத
அளவு   மயக்கமும்   அடைந்து  கொண்டிருப்பவனாகவே  இருக்கின்றேன்
என்று கூறியுள்ளார்கள்.

     ஒரே கழகம் இந்நாட்டில். ஒரே ஆசிரியர்.அந்த கழகத்திற்கு சட்டாம்
பிள்ளைகள் ஒருசிலர்; மாணவர்கள் கோடிக்கணக்கினர்.

     ஆசிரியர் பாடம்   சொல்லிக்  கொண்டேயிருக்கின்றார். மாணவர்கள்
அறிவு பெற்றுப் பெருக்கம் அடைந்துகொண்டே இருக்கின்றார்கள்.இந்தநிலை
தடைப்படுவதோ, வளர்ச்சியடைவதோ சட்டாம்பிள்ளைகளைப் பொறுத்தவை
யல்ல. மதில்   உறுப்பைத்   தாங்கிக்   கொண்டிருப்பதாகத் தோன்றும் ஓர்
உருவமும் மதிலைச் செய்த கொத்தனாரின் வேலைப்பாட்டில் ஒன்றே!

     இதுபற்றிப் பெரியார் வருந்த வேண்டாம்! மேலும் பெரியார்,

     திராவிடர்கழகத்தில் பிளவுகளும் உட்பூசல்களும் மலிந்து கிடக்கின்றன.
நல்லவர்கள்,   நாணயமானவர்கள் என்று  என்னால்   கருதப்பட்டவர்களிட
மெல்லாம் எனக்கிருந்த   உறுதி ஆட்டங் கொடுத்துவிட்டது. பொருளாதாரத்
துறையில், கழகத்தில் உள்ளவர்களில் யார்தாம் பொறுப்போடு  கவலையோடு
நடந்து கொள்ளுகிறார்கள்,    என   என்னால்  கண்டுபிடிப்பது  கடினமான
காரியமாகிவிட்டது.    இப்படிப்பட்ட   நிலை ஏற்பட்டதற்குக் காரணம் கழக
வளர்ச்சியும்   இதனால்    தோழர்கட்கு  ஏற்பட்ட    செல்வாக்கும் என்று
கூடச்சொல்லலாம் (அதுதான் உண்மை).