(குயில், குரல் 1, இசை 35, 3.2.1959)
தில்லிக் கழுகின் பிடியிலிருந்து தப்ப வேண்டும். தில்லிக்குத் தமிழகம் நல்ல பிள்ளையாக நடந்து கொள்வதன் வாயிலாகத் தமிழர்க்கான நலன்களை அடைந்து கொள்ளலாம் என்று சிலர் எண்ணுகின்றார்கள். அது மயக்க மேயாகும்.
தமிழ், தமிழ்ப் பண்பாடு, தமிழ் இனம் என்பன பூண்டற்றுப் போகவேண்டும் என்பதுதான் தில்லிக் கழுகின் முடிவான எண்ணம். இந்த முயற்சியை தில்லிக் கழுகின் முடிவான முயற்சியை அது மறைவட மாகச்செய்கின்றதா என்றால் அதுவுமில்லையே வெளிப்படையாகச் செய்து கொண்டே தமிழா உன்னால் என்ன செய்யமுடியும் என்று கேட்கின்றது தமிழனை நோக்கி.
சென்னை இராச்சியம் என்கின்றது தமிழ்நாட்டை. அது வேண்டாம் என்று தமிழர்கள் கரடியாகக் கத்தினார்கள். மதித்ததா தில்லிக்கழுகு! அதன் தலைக்கனம் சிறிதாயினும் குறைந்தபாடுண்டா! மேலும் அதன் தீயவழிநோக்கி இன்னும் இரண்டடி முன்னேறியது. தமிழ் வரலாறு, தமிழின் தொன்மை தமிழின் தனித்தன்மை ஆகிய இயல்பாக அமைந்த தமிழர் பெருமையே தலைகீழாக்க ஆவன செய்கின்றது. தமிழின் குடரை நோக்கிப் பாய்கின்றது. தில்லிக் கழுகின் கூரிய அலகு.
அது என்ன நினைக்கின்றது? தமிழகத்தில் நாலைந்து பேர்களைக் கையில் போட்டுக் கொண்டு நாலுகோடி மக்களையும் வேண்டியபடி சுரண்டி ஒழித்துவிடலாம்.
இதுபகற் கனவாகத்தான் போகும். இன்று தெரியாது. இன்னும் சில நாட்களில் தெரிந்து கொள்ளும் தில்லிக்கழுகு.
ஆகாஷ்வாணி என்றான் ஒரு முட்டாள். வானொலி இருக்க ஆகாஷ்வாணி என்னடா என்று கேட்டால் திருந்த வேண்டுமே! தில்லியின் துணைகொண்டு ஆகாஷ்வாணி என்று சொல்லுவேன் என்கின்றான் அந்த முட்டாள்.
|