பக்கம் எண் :

114

Untitled Document

29. தந்தை வந்தார்!


(குயில், குரல் 1, இசை 39, 3.3.1959)


     சென்னையினின்று   பிப்ரவரி  ஒன்றில் புறப்பட்டார் பெரியார், எதை
நோக்கி?   ஆரியநாட்டை,     நேருவின்   வீட்டை   நோக்கி.   ஆரிய
நகரங்களனைத்திலும் சீரிய - நேரிய வரவேற்புப் பெற்றார் பெரியார்.

     ஐதராபாத்தில்   தங்கினார்.   நாகப்பூரில்   தங்கினார்;  சான்சியில்
தங்கினார் பெரியார். அங்கங்கிருந்த தமிழ்நாட்டவர் பெரியாரை வரவேற்றுக்
காட்டியதில்   வியப்பில்லை.   உள்ளூர்த்   திருவாளர்கள் வெள்ளம்போல்
கூடிவரவேற்று   இன்றைய  இந்திய அரசியல் முரசு கிழிந்து வருவதற்குள்ள
காரணத்தையும் மக்கள் கைக்கொள்ள வேண்டிய தோரணங்களையும் கேட்டு
நல்லுணர்வு பெற்றனர் என்றால் அதுதான் வியப்பு!

     அதன்பின் கான்பூருக்குப்  பெரியார் ஏன் போகமாட்டார்? லக்கனோ
பெரியாருக்கு என்ன   சுக்குநீரா?   இரண்டு பெரு நகரங்களாலும் இந்தியக்
குடியரசுக் கட்சியின்   சார்பில்  பெரியாருக்கு நடத்தியது ஊர்வலம் அன்று.
அது பார்வலம்!

     பெரியாருக்கு அன்பு கனிந்த வரவேற்பு அளித்தனர்.அதே நேரத்தில்
நேரு கூட்டத்திற்கு அங்கலாய்ப்பு  அளித்தனர். குடியரசு கட்சியின் சார்பில்
ஏற்படுத்தப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்றல்ல; பல.  அக்கூட்டங்களில் கலந்து
கொண்ட   மக்கள்   தொகை   ஆயிரக்கணக்கல்ல;  நூறாயிரக்கணக்கான
ஐயாவின் அறிவுரைப் பெருக்கு நெஞ்சின் புத்துருக்கு! சொல் ஒவ்வொன்றும்
வறுமை அகற்றும் தங்கக்கட்டி; எதிரிகளைச் சிதறடிக்கும் சிங்கக்குட்டி.

     இருட்டறைக்குத்    திறப்புத்  தாழ். குருட்டுநோய் மருந்து. உண்மை
கருத்துப் பெற்ற மக்கள் அனைவரும்  அவைகளைப் பெறாத நாள் எல்லாம்
நாங்கள் பிறவா நாள் என்றாரன்றோ?

     மருணீக்கியார் (டாக்டர்)   அம்பேத்காரரையும்  நாங்கள் இழந்தோம்.
தாழ்த்தப்பட்ட,   ஒடுக்கப்பட்ட,  பிற்படுத்தப்பட்ட பெருந்தொகையினராகிய
எமக்கெல்லாம்   தலைவர்   நீங்களே!சார்ந்து கடைத்தேற எண்ணுவோர்
நீங்களே! இப்படியல்லவா செதுக்கி முடித்தது ஒரு செப்பேடு!