குயில், தினசரி, புதுவை 14.9.48 இந்திய யூனியன் எல்லா வகையிலும் பிற்போக்கான நிலையில் இருக்கிறது . காஷ்மீர் தொல்லை,ஐதராபாத் நெருக்கடி இவைகளை அது சமாளித்தாக வேண்டும். இன்று பெரியார். இராமசாமி கூட இந்திய யூனியனுக்கு நாம் தொல்லை கொடுப்பது சரியல்ல என்று தம் இந்தி எதிர்ப்புப் போரை நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு தொல்லைகள் மட்டுமல்ல, இந்திய யூனியன் மக்கள் செல்வாக்கை இழந்து தவிக்கிறது. சில நாட்களின் முன் புருஷோத்தம தாஸ் தாண்டன் என்னும் பெரியார் இந்திய யூனியனில் லஞ்சம் தலை விரித்தாடுவது பற்றியும் அரசியல செல்வாக்கினர் தங்கள் செல்வாக்கைச் சுயநலத்துக்குச் செலவு செய்வது பற்றியும் கண்ணீர் விட்டுக் கதறினார் என்று தேசியப் பத்திரிக்கைகளில் படித்தோம். அவர்நெஞ்சு பதைத்துக் கூறினார் .இந்திய யூனியனின் இன்றைய நிலைமையை விட முன்னைய பிரிட்டிஸ் ஆட்சிமேல் என்று! டாக்டர்.சுப்பராயன் ஆதித்தன் முதலியவர்கள்,இன்றைய இந்திய யூனியனில் என்ன நிலையில் வைக்கப் பட்டிருக்கிறார்கள்? - தம்மை அங்குள்ள கோட்சே கூட்டத்திற்கு நல்ல பிள்ளை என்று காட்டிக் கொள்ளுவதன் மூலமே தம் நிலைமையை அவர்கள் காத்துக்கொள்ள முடியும் . அல்லது முன்னேற முடியும். இவர்கள் கூறலாம் பி. இந்தியா உடனடியாக இந்திய யூனியனில் சேர்ந்துவிட வேண்டும் என்று! கோட்சே கூட்டத்தின் வால் பிடிக்கும் அடிமைப் பத்திரிக்கைகள் கூறலாம் ,உடனடியாகச் சேர்ந்து விடவேண்டும் என்று. இவர்கள்-இந்தப் பத்திரிக்கைக்காரர்கள் ஆயிரம் சொல்லட்டும்; அவைகள் குழந்தைகளின் அழுகைகள்! |