தொண்டர்களை இப்படியே எடுத்தாண்டு கொண்டு போவது பெருந்தன் மையாகுமா என்பது ஆராய்ச்சிக்குரியதேயாகும்.
தொண்டர்களின் மேல் பெரியாருக்கு இரக்கம் வேண்டும். அவர்களின் நிலை இரங்கத்தக்கதேயாகும். சாதி வேண்டாம், மூட வழக்கங்கள் தொலைய வேண்டும். பார்ப்பான் தமிழரின் பகைவன். புராணங்கள் நம்பக்கூடியவை அல்ல என்பன போன்ற கருத்துக்களைச் செயல்படுத்தப்புறப்பட்ட பெரியார் மக்களிடம் செல்வாக்கும் பெற்றார். இந்த வகையில் கிடைத்தவர்கள் தாம் இப்போது பெரியாரிடம் இருக்கும் தொண்டர்கள். அவர்கள் பெரியார் சொன்னபடி ஆடியதில் அவர்கள் கண்ட பயன் என்ன? தம் கொள்கை தம் இயக்கம் தூய நெறியில் முன்னேறிற்று என்று அவர்களின் நெஞ்சம் மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றதா? தம் நிலையில் எள்ளத்தனை உயர்ந்தார்களா? ஆனால் தம் ஒன்றுபட்ட நிலையிலிருந்து பிரிவினை நோய்வாய்ப்பட்டு துன்புறுகின்றார்கள். இந்தக் கால்ராவைப் பரப்பும் சில குருசாமிகளுக்கு பெரியார் ஆசனந் தருகிறார். சிறைக்குப் போகச் சொல்வார் பெரியார்- சுட்டிச் சொல்வதில்லை தொண்டர்கள். துன்பப்படச் சொல்வார் பெரியார். சாகவும் பின்னடையார் தொண்டர்கள். எதிர் வழக்காட வேண்டாமென்பார் பெரியார். எதிர் வழக்காடாமல் சிறைக்குப் போவார்கள் குருசாமி தவிர மற்றத் தொண்டர்கள். சிறையிற் சென்ற தொண்டரின் பெண்டு பிள்ளைகள் நாட்டுக்காகத் துன்பதைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்பார் பெரியார். தகரக் குவளையைக் கையில் ஏந்திக் கொண்டு தெருத்தெருவாகப் பிச்சை எடுக்கவும மனம் கூசார் தொண்டர் பெண்டுகள் பிள்ளைகள், காமராசரை ஆதரிக்க வேண்டும் என்பார் பெரியார்-தலையில் துணியைக் கட்டிக் கொண்டு கிளம்பி விடுவார்கள் தொண்டர்கள். காமராசரை ஆதரிக்கும் காரணத்தால் நாட்டைக் கெடுக்கும் பார்ப்பனருக்கும் தேர்தலில் பரிந்து பேச வேண்டும் என்பார் பெரியார்! மானத்தை விற்றும் அப்படியே என்பார்கள் தொண்டர்கள். அது மட்டுமல்ல... பணந்தண்டச் சொல்வார் பெரியார். பசி என்றும் பாராமலும் பணந்தண்டக் கிளம்புவார்கள். வரவேற்பு என்பார் பெரியார். கர ஏற்பாடு செய்வார்கள். தொண்டர்கள். தேர்மேல் ஏறிக் கொள்வதாய்ச் சொல்வார். ஏற்றிவிட்டுப் பார்மேல் நடந்து ஓடுவார்கள் தொண்டர்கள். காணிக்கை கேட்பார் பெரியார். மாணிக்கம் குவிப்பார்கள் தொண்டர்கள்.
|