(குயில், குரல்-3, இசை-32, 24.1.1961)
கல்விக்கு அராபிய எண்களே ‘ஆலோசனைக் குழு முடிவு’.என்ற தலைப்பில் ‘விடுதலை’ ஏடு குறிப்பிடும் ஒரு குறிப்புக் கீழ் வருமாறு; புதுடெல்லி ஜன.17. இந்தியாவில் கல்வி சம்பந்தமாக உலகத்தில் வழங்கி வரும் அராபிய எண்களையே பயன்படுத்துவதென்று மத்திய கல்வி ஆலோசனைக்குழு கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தமிழகக் கல்வியமைச்சர் சி.சுப்ரமணியம் கூறிய ஆலோசனையைக் குழு ஏற்று கொண்டு இம்முடிவுக்கு வந்துள்ளதாம். இந்த எண்கள் முதலில் இந்தியாவிலேயே தோன்றியபோதிலும் இவற்றிற்கு அராபிய எண்கள் என்று பெயர் வழங்குகின்றது. அந்த எண்கள் அதாவது 1,2,3 முதலிய எண்கள் முதலில் இந்தியாவிலேயே தோன்றியவை என்று அமைச்சர் சி. சுப்ரமணியம் கல்விக் குழுவில் சொல்லாடினார் போலும்! அவர், இந்த எண்கள் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இன்று வரைக்கும் இருந்துவரும் தமிழ் எண்களே என்பதை எடுத்துக் கூறவில்லை போலும்! அதனால்தான் அக்குழு இந்த எண்கள் இந்தியாவிலேயே தோன்றியவை என்று பொதுவாகக் குறிப்பிட்டு முடிவு செய்தது. இந்த எண்கள் தமிழ் எண்களே என்ற உண்மையை அமைச்சர் தெரிந்து வைக்கவில்லை என்றும் எண்ண முடியவில்லை. ஏனெனில் சில ஆண்டுகளின் முன் ‘விடுதலை’யில் இந்த உண்மை பெரியாரால் விளக்கப் பட்டிருந்தது. பெரியாரை என் வீட்டில் கரும்பலகையின் முன்வைத்து இன்றுள்ள 1,2, என்ற எண்களே என்பதை எழுதிக்காட்டி விளக்கினேன்.அதை வைத்தே நேரு, இந்த எண் இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்றவைகளே என்று பொதுவாகக் கூறியதை மறுத்து ‘விடுதலை’யில் அவை தமிழ் எண்களே என்று விரித்தெழுதினார்.
|