பிள்ளையின் ஊட்டியை அறுப்பது போல் கண்ணை மூடிக் கொண்டிருக்கும் மக்களை மண்ணிலிட்டுப் புதைத்தாலாவது நம் - பதவி - கூலி ஆகியவற்றை உறுதிசெய்து கொண்டாற்போதும். இதுதான் இன்றைய அரசியல் தலைவர், மக்கள் தலைவர் மனநிலை! இவர்கள் அராபிய எண் என்பது தமிழகத்தினின்று சென்றதான தமிழ் எண்ணே என்பதை வெளியில் எடுத்துச் சொல்வார்களா? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ், வரிவடிவம் இருந்தது என்பதை அரசினர் ஆராய்ச்சித் துறையின் சுவடியில் காண்க. கண்டால் 1 2 3 4 5 6 7 8 9 10 ஆகியவை, தமிழ் எழுத்துக்களே என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்தத் தமிழ் எண்களை இங்கு வணிகத் தொடர்புடைய அரபியர் கொண்டு போயினர்; அவர்களிடமிருந்து மேல்நாட்டுக்காரர் கற்றுக் கொண்டார்கள். ஒரு மாற்றமும் செய்யாமல் அவர்கள் அப்படியே எடுத்தாண்டனர். அவர்கட்குக் கிடைத்த அன்றைய உருவமே இன்றைய உருவம்; ஆனால் தமிழகத்தில் அந்த உருவம் நாளடைவில் மாற்றத்திற்கு உள்ளாயிற்று! இது இயற்கைதான். இந்த அறுபதாண்டில் ‘த்த’ என்ற இரண்டெழுத்தும் ஒரே எழுத்தாகவே எழுதப்படவில்லையா? இடையின ‘ர’ கரத்திற்கு மேலே இருந்த ஒருகோடு நீக்கப்பட்டதான மாற்றம் சென்ற இரு நூற்றாண்டில் ஏற்பட்டதல்லவா? நிற்க. தமிழர்கள் விழிக்க! தலைவர்களின் வஞ்சத்தை ஊன்றி நோக்குக.
|