(குயில், குரல்-3, இசை-34, 7.12.1961)
முதலமைச்சர் காமராசர்க்குத் தமிழகத்தில் உள்ள செல்வாக்கு நேருவுக்கு தலைவேதனையை அளித்து வருகின்றது.
முதலமைச்சருக்குப்பெரியார் உதவியாய் இருந்து வருகின்றார்.பெரியார் சாதியை ஒழிக்க வேண்டும் என்பவர். மேலும், அவர் தமிழ்நாடு வடக்கன் கையிலிருந்து விடுபட வேண்டும் என்பவர். தமிழகத்திற்கு நேருசெய்யும் ஒவ்வொரு நன்மையும் காமராசர் கையை வலிவு படுத்துகின்றது. அதனால் நேருவின் சொந்தக்காரரான பார்ப்பனரின் பகையைச் சுமந்தாக வேண்டியதாகிறது. இந்தக் காமராசரின் செல்வாக்கை மறைமுகமாக ஒழித்துக் கட்டுவது எப்படி என்று நேரு எண்ணினார். அதனால்தான் தம் சொந்தக்காரராகிய ஆச்சாரியைக் கிளப்பி விட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. முன்போலவே தமிழகத்தின் முதல்வராய் ஆச்சாரியார், வந்து தொலைந்து விட்டால், தமக்கு இப்போதுள்ள பார்ப்பனர் எதிர்ப்பு இராது. தமிழரின் வாலும் ஒட்ட அறுந்துவிடும். நேரு, ஆள் கொம்பன்! ஆச்சாரி தலைதூக்கி வருவதன் காரணம் நேருவாகத்தான் இருக்க வேண்டும். இது உண்மையானால் தமிழருக்கு இரட்டிப்பு வேலையாகி விட்டது. தமிழர்கள் பல்லைக் கடித்துக் கொண்டு நேருவினால் ஆடும் ஆச்சாரியை ஒரே அடியாய்த் தூக்கியடிக்க வேண்டும் வேறு ஆள் இல்லாததால், இழவே என்று காமராசரைத்தான் வெற்றி பெறச் செய்ய வேண்டும். வெற்றி பெற்ற காமராசருக்கு அஞ்சாமை என்ற மருந்தை உடம்பில் ஏற்றி வடக்கனை எதிர்க்கச் செய்ய வேண்டும்.
|