(குயில், சென்னை, 15.6.62)
திரு. இராதாகிருட்டிணன் அவர்கள் இந்திய அரசின் தலைவராக வந்தார்கள். அவருக்கு முன் தலைவராக இருந்த இராசேந்திரப் பிரசாத் வந்தது போலல்ல. இவர் வருகை சிறப்பானது. இந்தியைத் திணிக்க மாட்டோம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த நேரு போன்றவர்களின் கருத்தையும் மிதித்துத் தள்ளி இந்தி திணிக்கப் படிக்கத் தக்கது என்பதற்கு அறிகுறியாக அரசின் செய்தித்தாளையும் (கெஜட்) நூற்றுக்கு நூறு இந்தியிலேயே வெளியிட ஏற்பாடு செய்துவிட்டு வந்தார்.
வடக்கத்தியரான இராசேந்திரர் விலகிய பின் தெற்கத்தியாருக்கு அந்த இடத்தைக் கொடுத்தபோதே அதை நாம் எதிர்ப்பாத்ததுண்டு. தெற்கத்தி யாரைக் கொண்டே மக்களைப் பழிவாங்குவதில் தில்லி அரசுக்கு ஓரடியில் இரண்டு மாங்காய் விழுந்து விடுகின்றன. தமிழரைப் பழிவாங்கி விட்டது ஒன்று. தமிழர்கட்கு இராதாகிருட்டிணன் அவர்களைப் பகையாக்கியது ஒன்று. இந்தியை எதிர்ப்பதில் தமிழ் நாட்டிலுள்ள எல்லாக் கட்சிகளும் அக்கரையுடையவை. காங்கிரசு உட்பட ஆனால் அக்கட்சிகளின் சூழ்நிலை சரியாய் இல்லாததால் இந்தியை எதிர்ப்பதை வெளிக்காட்டிக் கொள்ள வில்லை. இதைக் கருதும் பொதுமக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. சூழ்நிலையாவது மண்ணாங்கட்டியாவது இந்தியை புகுத்துவோர் யாராய் இருந்தாலும் கட்சிகள் என்பவை எதிர்க்கத்தானே வேண்டும் என்று உள்ளம் கொதிக்கிறார்கள் மக்கள். ஒரு கட்சிதான் இயற்கை முறையில் இந்தியை எதிர்க்க முன் வந்தது.
|