பக்கம் எண் :

273

Untitled Document

4. வெல்க தமிழகம்


(குயில், சென்னை, 1.7.62)


     நாய்கள் குரைத்தன இதுவரைக்கும்!அவைகள் வாய் திறந்தன இப்போது!

     நோய்கள் நெருங்கின இதுவரைக்கும்.  அந்நோய்கள் தாயின் வாழ்வைத்
தாக்கின   இப்போது!   தாயைக் காக்கும் கடமை உண்டு தமிழர்க்கு. சாகுமா?
தமிழ் வாழுமா?  இது  இந்நாள் கேள்விகள். சாவாரா? தமிழர் வாழ்வாரா? -
இது  இந்நாள்  கேள்விகள். இந்தக் கேள்விகளுக்குத் தமிழர் தம்பதிய வாயாற்
சொல்லிவிட்டாற் போதாது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

     தமிழர்    செயலில்  இறங்க  வேண்டும். இரண்டுநாள் எண்ணி அல்ல;
இன்றே - இப்போதே!  அதோ திட்டம் தீட்டுகின்றான் எதிரி. அந்தத் திட்டம்
தமிழன் தோற்றமே இருக்கக் கூடாது என்று கூறினால் வியப்படைவதற்கில்லை.

     தாளைப்   பிடித்தான்  பிறகு    தோளைப்    பிடித்தான்  இப்போது
இப்போதென்ன   இதே  நொடியில் தமிழன்தமிழரின் நெஞ்சைப் பிடித்தாலும்
பிடிப்பான். இன்றே செயலில் இறங்கவேண்டும்.இப்போதே  எதிர்த்துக் கிளம்ப
வேண்டும். வேற்றுமை  நமக்குள் காட்டிக்கொள்ளக் கூடாது. போர் தொடங்க
வேண்டும். தமிழரெல்லாம் ஒன்றுபட்டு! எல்லாக் கட்சிகளும் ஒன்றுபட்டு!

     தமிழை    ஒழித்துத் தமிழரையும் அறவே ஒழித்துக் கட்டும் எதிரியைத்
தமிழர் விட்டு வைக்கலாமா? காலந்தாழ்த்தலாமா? மறுக்கலாமா? அந்தக் கட்சி
ஒழியட்டும்   என்று   இந்தக்   கட்சி எண்ணலாமா? பெருந்தன்மையாகுமா?
அறிவுடைமையாகுமா? வேருக்கு  வெந்நீர் பாய்ச்சப்படும்போது மேற்கிளைகள்
தம்மில் முரணுவது இயற்கையல்லவே!

     ஆடவர் பெண்டிர் கட்சிகள் ஒருமனம் கொள்க! பெருமனம் கொள்க!

     எழுக   தமிழர்   பெரும்படை!  சுண்டைக்காய்கள் என்று எதிரிகளால்
எண்ணப்படும் தமிழர்  கடல் என்று காட்டுக. பாய்க எதிரியின் திட்டம் பொடி
படச் செய்க.

     வெல்க தமிழகம்! வாழிய தமிழன்னை!