பக்கம் எண் :

280

Untitled Document

2. பொன்னான புதுவை
தன்னையேதான் நம்ப வேண்டும்!


(குயில், குரல்-1, இசை-23, 4.11.1958)


     தூங்கியவரைக்கும்  பிழை  செய்து  வந்த   புதுவையே! நீ, இன்னும்
தூங்குவது இறப்பதாகும்.

     புதுவை, அசம்புலி,    அசனம்  புலியுமாகவே இருந்தால், கலைத்துத்
துரத்தினர், அரசினர்! (அசல்-ஆடு)

     பொன்னான   புதுவையே!   உனக்கும் தெரியும். அந்தக் கட்சியிலும்
இந்தக் கட்சியிலும் எப்படி என்று.

     தன்னைத்தானே   தனக்குத் தருங்கை. பிறர் கை இடிக்கும் உலக்கை.

     வணிகர்களை எழுப்பு! உன் வாழாத மக்களை வாழத் தூண்டு.அஞ்சும்
அலுவல்காரருக்கு   உணர்ச்சியை ஊட்டு. படிப்போர்  வீரர்களைக் காட்டிக்
கொடுப்பாரை நம்ப வேண்டாம் என்று இடித்து இடித்துக்கூறு! பணம் பணம்
என்று மகிழ்ச்சியில்   தூங்குகின்றவர்கள் நாளைக்குப் பிணம் பிணம் என்று
அழ   வேண்டிய    நிலைவரும் என்று எச்சரிக்கை செய்!  ஏழை மக்களை
எழுப்பு!

     அருமைப் புதுவையே,

     இருட்டுக்   குகையில்   எரிமூட்டப்பட்டுவிட்டது! வெளியில் வரட்டும்
வேங்கைக் கூட்டம்.

     ஒன்று   கூடி  பொதுநலம் காக்க ஒரு  குழுவை இன்றே தேர்ந்தெடுத்
திடல் வேண்டும். அந்தக் குழு நல்லவர் கழகமாகத் திகழ வேண்டும்.

     எவர்க்கும் கட்டுப்படாததாய் இருக்க வேண்டும்.

     இதோ   வரப்போகின்றது    புதுவை சட்டசபைக்குப் பொதுத்தேர்தல்.
ஒவ்வொரு   தொகுதிக்கும் நல்லவர்  கழகம் ஆளை நிறுத்தி வெற்றி பெறச்
செய்யவேண்டும்.