(குயில், 27.1.1959)
அண்மையில் உருப்பெற்றது நாற்பத்தொன்பதின்மர் கொண்ட தமிழகப் புலவர்குழு. 17-1-56 சனிக்கிழமையன்று திருச்சித் தமிழ்ச் சங்கத்தார் அப்புலவர் குழுவினுக்கு வரவேற்பு நல்கிப் பாராட்டினர் சிறப்பான முறையில். வருவார் எனத் திருச்சித் தமிழ்ச் சங்கத்தாரால் எதிர்பார்க்கப் பெற்ற 46 புலவர்களில், வந்த புலவர்கள் முப்பத்துமூவரேயாவர். மற்றவர் வராமைக்கு வருந்தியும் வரவேற்பு விழா சிறப்புறுமாறு வாழ்த்தியும் திருமுகம் அனுப்பியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் பொங்கல் விழாவிற்குப் பற்பல ஊர்களுக்கும் அழைக்கப் பெற்றிருந்தவர்கள் அன்றோ.
வரவேற்பு விழா, காலை 6 மணிக்குத் தொடங்கிற்று. விழாவிற்குப் புலவர் குழுவினரில் ஒருவரும், அண்மையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினின்று ஓய்வு பெற்றவரும் முதுபெரும் புலவரும் ஆகிய திருவாளர் சதாசிவப் பண்டாரத்தார் தலைமை கொண்டருளினார்கள்.
திருச்சித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழகப் புலவர் குழுவினர்க்கு வரவேற்பிதழ் படிக்கப் பெற்றது. பண்டாரத்தார்க்கு மலர் மாலை சூட்டிப் பெருமகிழ்ச்சி விளைவித்தார்கள். பாராட்டுக்கு நன்றி கூறுமுகத்தால் தமிழகப் புலவர் குழுவின் சார்பில் பண்டாரத்தாரும் மற்றும் நால்வர் புலவரும் சொற்பெருக்காற்றி வந்திருந்த தமிழ்ப் பெருமக்களையெல்லாம் உணர்ச்சியில் ஆழ்த்தினமை குறிப்பிடத்தக்கதாம். திருச்சித் தேவர் மன்றத்து மேடை அன்று பெற்ற பெருமை என்றும் பெற்றதில்லை என்றனர் பலர். புலவருலகத்து முதுகெலும்புகளாகிய இம்முப்பத்து மூவரும் இனி நாம் செய்ய வேண்டுவது உண்டு எனில் அது செந்தமிழ்த் தொண்டு எனும் ஒரே உள்ளத்தினராய்க் காட்சியளித்த புதுமையை இந்நாடு பன் நூற்றாண்டு களாகக் கண்டதில்லை என்றனர் பற்பலர்.
|