இதைச் செல்லநாய்க்கர் சொல்லித்தான் நாம் தெரிந்து கொள்ளுகிறோம். இதில் நம் கருத்து என்னவெனில் இப்போதுள்ள நீதிபதிகளும் சிலரும் நீதித்துறைத் தலைவரும் உறவினர் என்றால் அதை நாம் பாராட்டவேண்டும் என்பதுதான், ஏன்? அந்த உறவினர் ஒருவரையொருவர் ஆதரிப்பதன் வாயிலாக என்ன அநீதி செய்தார்கள்? தன்னலங்கோரி அவர்கள் செய்த தீர்ப்புகள் எவை? அவர்கட்கு இருக்கும் அதிகாரத்தைக் கெட்ட வழியில் செலவிட்டுச் சொத்து - ஒரு காசு சேர்த்துக் கொண்டார் என்று எவனாவது விரலை விடட்டும்! அவரெல்லாம் உறவினர் இவரெல்லாம் உறவினர், உள்நாட்டுப் பிள்ளைகளைப் புதுவையில் வைக்கக் கூடாது என்று எழுதிய பழைய புகார் விண்ணப்பத்தின் நகல் செல்லநாய்க்கர் மேசையில் இருக் கலாம், அது நாலு குடும்பமே புதுவையை ஆண்டபோது சரியான விண்ணப்பமாயிருக்கலாம். உள்நாட்டு அரசியலில் செல்லநாய்க்கரும் தலை நீட்ட அது அப்போது பயன்பட்டிருக்கலாம். அப்படிச் செல்லநாய்க்கர் தலை தூக்கியும் ஒன்றும் செல்லநாய்க்கரால் கிழித்து விடவில்லை என்று மக்கள் கசந்து கொண்டார்களே அப்போது அந்தப் புகார் விண்ணப்பம் சரியானதாயிருக்கலாம். இப்போது நல்லவர்களை ஒழித்துக் கட்ட உதவுமா? முடியுமா? அப்போது ஆறாயிரம் கல்லுக்கு அப்பால் இருந்தான் நாடாண்ட பிரஞ்சுக்காரன். ஆதலால் அவர்களை ஏமாற்றி அவரெல்லாம் சொந்தக்காரர இவரெல்லாம் என்று சொல்லி அவன் பேரையும் கெடுத்து ஊர்த்தாலியையும் ஒட்ட ஆறுத்துக் கூத்தாட முடிந்தது. இப்போதும் செல்லநாய்க்கர் அதே புகார் விண்ணப்பத்தை முன்னைய விலைக்கே விற்பனை செய்கிறார் என்றால் செல்ல வேண்டுமே! அவரெல்லாம் சொந்தக்காரர் இவரெல்லாம் சொந்தக்காரர் என்று செல்ல நாய்க்கர் புகார் விடும் தாளும் அடுத்த வீட்டுக்காரனுக்குத்தானே? நிதித்துறையினர் வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் அவருடையதே! திருடியதன்று. கைக்கூலியாக வாங்கியதென்று காட்ட அவர்களின் சட்டைப் பையில் - அவர்களின் வீட்டில் என்ன உண்டு அவர்களின் பரம்பரைக் குடும்பத்தின் நல்ல பெயர்தான் உண்டு. செல்லநாய்க்கர் வேண்டுமானால் இரண்டு கண்ணாடிகளின் நடுவிலிருந்து தம் முதுகைப் பார்க்கட்டும். இன்னொன்று, இந்த நீதிபதிகளில் சிலர் வருவாய்த் துறையினின்று வந்தவர்களாம். செல்லநாய்க்கர் கூறும் புகார்களில் இதுவும் ஒன்று. கேவல் சிங்கின் புகழுக்குரிய செயலென ஒன்றை நாம் காட்ட வேண்டுமானால் வருவாய்த் துறையினின்றும் கல்வித் துறையினின்றும் எடுத்து நீதித் துறையை
|