குயில், தினசரி, புதுவை, நாள்:- 5.10.48; பக்.2-3
திரு. டாக்டர். சுப்பராயன் அவர்கட்கு இப்போது பதவியில்லை. இருந்த மந்திரிப் பட்டம் பிடுங்காமல் பிடுங்கப்பட்டது. திரு. காமராஜ் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்தான். இருந்தாலும் மதிப்பில்லாத நிலையிலல்லவா வைக்கப்பட்டிருக்கிறார்? ஓமந்தூரார் முதலமைச்சரும் தம்மை ஆதரிக்கிறார் என்று சொல்லும்படி இல்லையே; தாம் ஓர் அமைச்சராகவோ, அமைச்சர்களின், செல்வாக்குடையவராகவோ இருந்தாலும் மன அமைதி இருக்கும், எந்த இழவுமில்லையே, அது மட்டுமா, அடுத்த முறை, இருக்கும் பதவியையும் பிடுங்க அல்லவா திட்டம் வலுப்பட்டு வருகிறது. திரு. ஆதித்த நாடாருக்கு எந்தப் பக்கம் கோணை? தமிழ் ராஜ்யக் கட்சியையும் காண்ஸல் செய்துவிட்டு இந்தி ராஜ்யக் கட்சியாகிய காங்கிரஸில் சேரவில்லையா அவர்? தியாக மில்லையா இது? சட்டசபை மெம்பர் பதவி கிடைத்தது என்றால் போதுமா? ஏன் ஒரு மந்திரி கிந்திரியாகக் கூடாது? திரு.டாக்டர் சுப்பராயனும், திரு. காமராஜும், திரு. ஆதித்தனும் காங்கிரஸ் உலகில் நல்ல பெயர் வாங்கி விட்டு மறுவேலை பார்க்க எண்ணுவதில் பிழை என்ன இருக்கமுடியும்? இந்தி எதிர்ப்பை ஊர் ஊராய்ச் சென்று திட்டுகிறார்கள் என்றால் திட்டினால்தானே நல்ல பெயர் கிடைக்கும்? இந்தி எதிர்ப்புக்காரரை மண்டையுடைக்கும்படி செய்யும் ஏற்பாட்டை இவர்கள் ஏன் ஆதரிக்கமாட்டார்கள்? நல்ல பெயர் எப்படி வரும்? இப்போது நடந்த சென்னை நகரசபைத் தேர்தலில் காங்கிரஸ் காரரை ஆதரிக்கும்படி தெருத்தெருவாய், தேள் கடி மருந்து விற்பவர்கள் போலச் சொற்பொழிவு நடத்தாவிட்டால், நல்ல பெயர் எப்படி வரும் - ஆனால் இவர்கள் தேடித் திரியும் நல்ல பெயரும் மக்கள் ஆதரவும் காங்கிரஸை எதிர்ப்பதாலேயும் கிடைக்கும் இது தெரியவில்லை இவர்கட்கு! சரியாகக் கணக்குப் போடமாட்டோம் என்கிறார்கள்.
|