குயில், தினசரி, புதுவை, நாள் : 6.10.48 பக்.2.
பிரஞ்சிந்திய மக்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் முறையில் தம்தம் கட்சிக் கொள்கையைத் தெளிவுபடுத்துவது நல்லது. நோக்கத்தை முடிவுபெற வைக்க அதுதானே வழி! பிரஞ்சு அரசாங்கத்தில் உள்ள குற்றங்களை எடுத்துக் காட்டலாம். இந்திய யூனியனில் இங்கிருப்பதைவிட நன்மைகள் இருந்தால் தெளிவு படுத்தலாம். இங்குள்ளவர்களில் இன்னின்னார் அரசியலைக் கைப்பற்றினால் இன்ன வகையில் கெடுதி சம்பவிக்கும், என்பதை எடுத்துக் கூறலாம். நாங்கள் அரசியலில் செல்வாக்குப் பெற்றால் இன்னின்ன நன்மை செய்வோம் என்பதை எடுத்துக் காட்டலாம். இவையெல்லாம் பிரசார முறைகளே ஆகும். ஆனால் இந்தப் பிரஞ்சிந்திய அரசாங்கத்திற்கும் இந்திய யூனியனுக்கும் மனக்கசப்பை உண்டு பண்ணுவதன் மூலமே தங்கள் கொள்கையை சாதித்துக் கொள்ள எண்ணுவது பிழையாக முடியும் என்று கருதுகிறோம். இந்திய யூனியனில் நடைபெறும் பத்திரிகைக்கு, யோசனையின்றி எந்த கடிதத்தையும் எழுதி விடவேண்டாம். இதைநாம், தந்திரமாகவோ, கொள்கையில், மாறுபட்டுள்ளவர்களை ஏமாற்றவோ கூறுவதாக நம் தோழர்கள் நினைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளுகிறோம்.
|