பக்கம் எண் :

4

Untitled Document
3. இந்திய யூனியனின் இன்றைய நிலை


குயில், தினசரி, புதுவை. நாள்: 15.9.48. பக்.2-3.


     இந்திய யூனியனில் மிகமிக நெருக்கமானநிலை ஏற்பட்டிருப்பதாக
இந்திய யூனியனின் கவர்னர் ஜெனரல்  அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
நாம் கூடநேற்று இந்தியயூனியன் பிற்போக்கான நிலையில் இருப்பதாகக
கூறினோம்.

     தென்னாடு   என்றும்,  பழந்தமிழ் நாடு என்றும் சொல்லப்படும்
திராவிட நாடு(தமிழ்நாடு, தெலுங்கு நாடு, மலையாள நாடு, கன்னடநாடு
அனைத்தும் சேர்ந்தது)இந்திய யூனியனிலிருந்து  பிரிக்கப்படவேண்டும்,
பாகிஸ்தான்   பிரிக்கப்பட்டதுபோல்,  ஏன் எனில், திராவிடரின் கலை,
நாகரிகம்,   ஒழுக்கம்  வேறு.   திராவிடர் கலையில், மதச்சண்டைக்கு
வழியில்லை,  இதனால்தான் திராவிடப் பெரியார்  இராமலிங்க அடிகள்
''மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்'' என்று கதறினார்.

     திராவிடர்   நாகரிகத்தில்   வர்ணாஸ்ரமக் கலகங்கள்  இல்லை.
ஆயிரம் சாதிகள் கூறி மக்களை அலைக்கழிப்பதைத்திராவிட நாகரிகம்
வெறுக்கிறது.

     இதுபற்றித்தான் நடுநிலை உள்ளமுடைய  பாரதியாரும் ''சாதிகள்
இல்லையடி பாப்பா'' என்றார்.

     திராவிடர்  ஒழுக்கம் மிக  மேன்மையானது. ஒருத்தியைப் பலர்
மனைவியாகக்கொள்ளுவதைத் திராவிடர்  வெறுப்பார்கள். சூத்திரனுக்கு
அதாவது பார்ப்பனனல்லாத  மற்றவர்களுக்கு   ஒரு   நீதியும் பார்ப்ப
னருக்கு ஒரு   நீதியும்   என்னும்  அயோக்கியத்தனமான  செயலைத்
திராவிடர்   என்றும்   ஒத்துக்   கொள்வதில்லை.  இதுக்  கருதிதான்
பாரதியாரும் ''சூத்திரனுக்கொரு நீதி - தண்டச்சோறுண்ணும் பார்ப்புக்கு
(பார்ப்பனருக்கு) வேறொரு நீதி'' என்று வெறுத்துக் கூறினார்.

     திராவிடநாடு பிரிவினை கோரும் திராவிடர்க்கு இன்றைய இந்திய
யூனியன்   இழைத்துவரும்   கேடு   உலகறிந்ததாகும், திராவிடர் நாடு
பிரிக்கப்படும் வரைக்கும் இந்திய யூனியனில் அமைதியைஎதிர்பார்ப்பது
எப்படி?