திராவிட நாட்டில் தமிழர்களில் 100க்குப் பத்து பேருக்குக் கூடத் தமிழ் தெரியாதிருக்கையில்,தமிழ்மாணவர்கள் இந்தியைக் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்று சட்டம் செய்திருக்கிறார்கள், இந்திய யூனியன்சர்க்கார். இதை எதிர்த்துத் தமிழ்நாடு முழுதும் கிளர்ச்சி நடக்கிறது. இந்தக் கலவரம் அடக்குவது எந்நாள்? திராவிட நாட்டை இன்று ஆரிய எதேச்சதிகாரம் ஆட்சி நடத்துகிறது. ஜமீன்களையும், இனாம்தாரர்களையும் ஒழிக்கப் புறப்பட்ட சர்க்கார் இனாம் தாரர்களை ஒழிப்பதைக் கைவிட்டதற்கு என்ன காரணம்? இனாம்தாரர்கள் அனைவரும் பார்ப்பனர் என்ற காரணத்தாலல்லவா? பணக்காரர்களுக்கு ஒரு நீதியும் ஏழைக்கு ஒரு நீதியும் வழங்கப்படும். இந்திய யூனியனில் - வடநாட்டான் சுரண்டலுக்கென்றே வைக்கப்பட்டிருக்கும் திராவிட நாட்டில் கலவரமும் நெருக்கடியும் தொலைவது என்றைக்கோ அன்றைக்குத்தான் பிரஞ்சிந்தியர் இந்திய யூனியனில் சேருவது பற்றி எண்ணமுடியும். இன்றைய பிரஞ்சிந்தியாவில் பார்ப்பனர் ஆதிக்கம் இல்லை. வடநாட்டான் சுரண்டல் இல்லை.வடநாட்டான் ஆதிக்கம் இல்லை.
|