குயில், தினசரி, புதுவை, நாள்: 16.9.48. ப.2
தோழர் வ.சுப்பையா அவர்களைத் தலைவராகக் கொண்ட பிரஞ்சிந்திய கம்யூனிஸ்டுக் கட்சியால் சட்டசபைத் தலைவராக்கப் பட்டவர் திரு. அவோக்கா பாலசுப்ரமணியன் அவர்கள்.அவர் பிரஞ்சிந்திய சபைத் தலைவராயிருந்த காலத்தில் தம்மைத் தேர்ந்தெடுத்த தோழர் சுப்பையா அவர்களின் கட்சிக்கு எவ்விதத் துரோகமும் விளைத்தாரில்லை. அதன் பிறகு ஆட்சியில் வந்த திரு . குபேர் அவர்களைத் தலைவராகக் கொண்ட சோஷலிஸ்டு கட்சியும் திரு. பாலா அவர்களையே சட்டசபைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது .
இப்படி ஒன்றுக்கொன்று எதிர்ப்புள்ள இரண்டு கட்சிக்காரர்களால் அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் சட்டசபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் உண்டென்றால் பிரஞ்சிந்திய சரித்திரத்திலேயே திரு . பாலா ஒருவரைத்தான் சொல்லமுடியும் .இதற்கு காரணம் திரு.பாலா அவர்களின் நன்றியறிதலும், நேர்மையும் , நாணயமுமேயாகும்.அவர்' 'நான் தொழிலாளர் நன்மைக்குப் பாடுபடப்போகிறேன் '' என்று சொல்லிக் கொண்டதுமில்லை அடுத்தநாள் சுயமரியாதைக் கட்சியில் திராவிடர் கழகத்தில் குதித்ததுமில்லை. அவர் நான் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவன் என்று சொன்னதுமில்லை. மறுநாள் வன்னியர் சங்கத்தில் குதித்ததுமில்லை;அவர் வன்னியர் சங்கத்தைப்பலப்படுத்தப் போகிறேன் என்று சொன்னதுமில்லை.அடுத்த நாள்காலையில் நாக்குப்பூச்சி வில்லை விற்பவன் போல் நெடுஞ்சட்டை போட்டுக் கொண்டு '' நான் காங்கிரஸ்காரன் '' என்று தடுக்கி விழுந்ததுமில்லை . சுருக்கமாகச் சொல்லப் போனால் திரு .பாலா கட்சி நிலைமாறாத் தன்மையில் அசையாத தங்கச்சிலை! இதையெல்லாம் எதற்குச் சொல்கிறோம் என்றால் தங்கச் சிலையைத் தன்போலாக்கப் பார்க்கிறது ஒரு தஞ்சாவூர் பொம்மை. எப்பக்கமும் தலை சாய்த்தாடும் தஞ்சாவூர்ப்பொம்மை, மற்றவர்களையும் அப்படி நினைத்துவிடும் என்பதும் மற்றவர்களையும் ஆக்க முயலும் என்பதும் இயற்கை தானே? |