அப்படியே இருந்தாலும், இதைப் பிரஞ்சிந்திய சர்க்காரின் பணிவு என்று எப்படிச் சொல்வது?
செல்வாக்கிருப்பதாகச் சொல்லும் பிரஞ்சிந்தியக் காங்கிரஸ்காரர்களே தேதியைத் தள்ளி வைக்கிறோம். உங்களுக்குச் செல்வாக்கிருந்தால் நீங்கள் வெற்றிபெறச் சந்தர்ப்பம் அளிக்கிறோம் என்று அவர்களின் பெருந் தன்மையைக் காட்டிக் கொண்டதாகத் தானே கூறவேண்டும்? இதுதானே பெருந்தன்மைக்கு அழகு? சரி தேதியைத் தள்ளிவைத்தார்கள். என்ன செய்தது காங்கிரஸ்? எங்கு சென்றது காங்கிரஸ்? எந்த மக்களைத் திருப்ப முடிந்தது காங்கிரசால்? இப்போது என்ன செய்கிறது காங்கிரஸ்? முனிசிப்பல் தேர்தலே வேண்டாமாம். ரெபராண்டம் என்ற பொது வாக்கெடுப்பும் வேண்டாமாம் - இந்த முடிவுக்கு எதிராக இருப்பவர்களுக்கு ஹைதராபாத் ராஜாக்கர் களுக்கு நேர்ந்த கதிதான் என்ற கருத்துப்பட எழுதுகிறது தினமணி! இப்போதே இங்கிலீஸ்காரர் போல் பிரஞ்சு சர்க்கார் இதைவிட்டுப் போய்விடவேண்டும் என்று மரியாதையாய் விண்ணப்பிக்கிறது. பிரஞ்சு இந்திய சர்க்காருக்கு. ஹைதராபாத் நவாபைத் தட்டிக் கொடுத்து அங்கு இந்துக்களுக்குத் தொல்லை கொடுத்தவர்களான ராஜாக்கர்களை இந்திய யூனியன் சிறையில வைத்தது. ஆனால் பிரஞ்சிந்தியாவில், ஒரு தாய்வயிற்றுப் பிள்ளைகள் போல் ஒத்திருக்கும் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்களைச் சிறையில் வைத்து விடுவோம் என்று கூறுகிறது ‘தினமணி’ ஆனால், பிரஞ்சு சர்க்காரை இன்னது செய்வோம் என்று ‘தினமணி’ ஒன்றும் சொல்லவில்லை. அவர்களுக்கு மரியாதை வைக்கிறது. கெஞ்சுகிறது. அவர்கள் அயலவர் என்றும் அதுவே கூறுகிறது. தேசபக்தி பேசுகிறது. இங்கு இந்தியா யூனியனில் உடனடியாகச் சேரமாட்டோம் என்று கூறுகிறவர்கள் ராஜாக்கர்கள், பிரஞ்சிந்திய சர்க்கார் ஹைதராபாத் நிஜாம் தினமணி மிரட்டுகிறது. அது மிரட்டுகிறபடி இன்றைக்கே இங்குள்ளவர்களை ராஜாக்கர்களாக்கித் தொலைத்தால் நாள் வீணாகாதே! வீண் தொல்லை ஏற்படாதே!
|