குயில், தினசரி, புதுவை, நாள் : 12.10.48; பக்.2-3
தென்னாடு அதாவது திராவிடநாடு இப்போதுள்ள கொடிய ஆட்சி தீர்ந்து நன்னிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. திராவிடநாடு தன் விடுதலையைப் பெற நாள் செல்லாது. அது வரைக்கும் முஸ்லீம், இந்து, கிருஸ்துவர் ஆகிய திராவிடர் அனைவரும், பிரஞ்சிந்தியாவின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எப்போதும் போல், ஒற்றுமையாகவும், உரிமையுடையவர்களாகவும் இருந்துவர வேண்டும். பிரஞ்சிந்தியாவில், வியாபார வரிக்கொடுமை இல்லை. அமிதலாபவரி என்னும் அண்ணாந்தாள் இல்லை. முஸ்லீம்களை அவர்கள் முஸ்லீம்கள் என்பதற்காகவே கொடுமைப் படுத்துவோர் இங்கில்லை, இருக்கவும் முடியாது. இங்கு எல்லாருக்கும் வாக்குரிமை இருக்கிறது. அங்கில்லை. எல்லா மாணவர்க்கும் இங்கு இலவசக் கல்வி, இது அங்கு இல்லை. ஆலை. அச்சுக்கூடம் முதலிய தொழிற் சாலைகளுக்கு இங்கு எவ்வித நிர்பந்தமும் இல்லை. அங்கே அவைகளுக்கு, மூச்சுத் திணறத்தக்க நிபந்தனைகள் உண்டு. நிலவரி, வீட்டுவரி இங்கு இலகு அங்கே விற்பனைவரி, கொள்முதல் வரி முதலிய ஜனவரிகட்கு அளவில்லை. அலுவல்காரர்கட்கு இங்கு அதிகச்சம்பளம், அங்கு சாப்பாட்டுக்கே இழுப்பு. இங்கே பழைய ராணுவ சிப்பாய்களுக்கு 100 முதல் 1000 வரை மாதச்சம்பளம் நடக்கிறது. அங்கே அவர்கள் பாடு அரோகரா! இந்தச் சம்பளத்தை பிரஞ்சுசர்க்காரின் பணத்திலிருந்து பெரும்பாலும் கொடுத்து வருகிறார்கள்.
|