பக்கம் எண் :

58

Untitled Document

5. தமிழ் மாணவர் ஆவல்!


(குயில்; குரல் 1; இசை 9; 29-7-58)


     ஒருவன் வாழ்வு அவன் பிறந்த  நாட்டின்  மக்களுடன்   பிணைக்கப்
பட்டிருக்கிறது.

      அவன் கற்கும் கல்வியும் அவன் காணும் வழிகளும் அவன் ஈடுபடும்
துறைகளும்   அவன்  ஆற்றும் பணிகளும்  அவனுக்கு மட்டுமின்றி, அவன்
நாட்டு மக்கட்கும் பயன்படுவன ஆகும்.

      ஒரு   நாட்டின்    வேரிற்     பிணைந்துள்ள  பண்பாடுகளினின்று
அந்நாட்டினன்   ஒருவன்  பிரிந்து வாழமுடியாது.  ‘‘வாழ்கின்றானே அதோ
ஒருவன்’’   எனின்    அது   தற்போதைய தோற்றம்.  அவன் மண்ணோடு
மண்ணாய் மறைந்து போகவேண்டும். இது இயற்கையின் திட்டம்.

      அறிவு   வளர்ந்து   கொண்டே - விரிந்து   கொண்டே   செல்லும்
இயல்புடையது!      கல்வி   ஏனெனில்     அந்த வளர்ச்சியை - விரிவை
விரைவுபடுத்த உதவுகிறது.

      தமிழ்   மாணவன்   காலத்தால்  மிகப்பழைய ஆள்! அவன் அறிவு
வளர்ந்து   கொண்டு,   விரிவடைந்து   கொண்டு  வருகின்றது. பதினாயிரக்
கணக்கான ஆண்டுகளாக இடையில் மறைப்பு  ஏற்பட்டிருக்கலாம். துண்டிப்பு
ஏற்பட்டிருக்க   முடியாது.   கண்ணுக்குத்    தோன்றாமல் இருந்திருக்கலாம்.
தொடர்ச்சியற்றுப் போகமுடியாது.

      தமிழ் மாணவனின் இன்றைய அறிவின் நிலை மகிழ்ச்சிக்குரியது. அது
விரைவுபடுத்தப்படுகிறது கல்வியால்! கல்வி   தமிழ்மாணவனை இருகை ஏந்தி
வரவேற்கின்றது!     தமிழ்   மாணவன்    கல்வியின் இன்றியமையாமையை
உணர்கின்றான்.    அவன்   தனக்குரிய   பண்பாடுகள்   எவை? என்பதை
உணர்கின்றான்.   அவன்   தொண்டு  செய்யப் பதைக்கின்றான்.  மறுப்பார்
பெற்றோரானாலும் கற்றோரானாலும் எதிர்க்கின்றான்.

      நான்   எனக்கு    மட்டுமா   வாழவேண்டும்? என்று கேட்கின்றான்
என்தொண்டு எனக்கு மட்டுமா என்று கேட்கின்றான்.