(குயில், குரல் 1, இசை 12, 19.8.58)
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வாழவேண்டும். இளவரசர் முத்தையா அவர்களுக்கு என் விருப்பம். தமிழ்ப் பல்கலைக்கழகமாகத் திகழவேண்டும் எனக் கருதி நிறுவப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அண்ணாமலையரசரால் உங்கள் அருமைத் தந்தையாரால்! ஆதலால் அந்த நிறுவனம் தமிழுக்கும் தமிழருக்கும் நன்மை பயப்பதாய் இருத்தல் வேண்டும். தமிழுக்கும் தமிழருக்கும் அமைந்த மேம்பாட்டுக் குறைவு நேராத வகையில் நடந்து கொள்ள வேண்டும். இதுவரைக்கும் தமிழுக்கும் தமிழருக்கும் என்ன நன்மை செய்தது இந்த நிறுவனம்? நிறுவனத்திற்குத் தமிழர் காட்டும் ஆதரவின் எடைக் கெடையாகக் காட்ட வேண்டிய சலுகையையாவது தமிழருக்கும் தமிழுக்கும் காட்டியதுண்டா நிறுவனம். காட்டியதுண்டு என்றால் யாருக்கு? தமிழின் வேருக்கும் தமிழர் வாழ்வின் வேருக்கும் வெந்நீர் பாய்ச்சுவார்க்கே இன்றுவரைக்கும் அந்த நிறுவனம் காட்டிற்று. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஏற்பட்டது 1929 என்று நினைக்கின்றேன். இந்த ஏறத்தாழ 30 ஆண்டுகளாக தமிழை எவ்வளவோ முன்னேறச் செய்திருக்கலாம். முன்னேறச் செய்வதற்குப் பதிலாக பிற்போக்கை ஏற்படுத்தியது என்றுதான் சொல்லவேண்டும். பேராசிரியர்களாகப் பார்ப்பனரையே போட்டுத் தமிழைக் கெடுத்து வந்துள்ளது. தமிழரின் மேன்மையைக் குறைத்து வந்துள்ளது நிறுவனம். ரா. ராகவையங்கார் தமிழ்வரலாறு என்ற ஒரு நூலைச்செய்தருளினார். நிறுவனம் அவருக்குக் கொடுத்த ஆணவத்தால் சுப்பிரமணிய சாத்திரி என்பார் (தொல்காப்பியம்) சொல்லதிகாரம், வரலாற்று முறை தமிழ்வாசகம் முதலிய நூற்களை எழுதியதன் வாயிலாகவும் தமிழின் தமிழரின் உண்மை வரலாற்றையே தலைகீழாக்கியருளினார் நிறுவனத்தின் அருளினால்.
|