தெ.பொ.மீக்கு நீங்கள் எல்லோரும் அஞ்சி நடுங்குங்கள் என்று கூறுகின்றது அந்தத் தொகை! இன்னும் இதுபற்றி விரிவாகப் பின்னர் எழுதலாம். இப்போது அமைக்கப்பட்டிருக்கும் திராவிட மொழியாராய்ச்சிக் குழுவில் யார் யார் இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். தலைவர் டாக்டர் சுனித்குமார் சட்டர்ஜி மற்றவர்கள் டாக்டர் எஸ். எம் காட்டர் திரு. ஏ. சுப்பையா டாக்டர். ஆர். பி. சேதுப்பிள்ளை திரு. லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் திரு. சீகாந்தையா டாக்டர் மு. வரதராசன் டாக்டர். மா. இராசமாணிக்கம் திரு. பி. திருஞானசம்பந்தம் திரு. தேவநேயப் பாவாணர் திராவிட மொழியாராய்ச்சிக் குழு இதுதானே! இதில் தெ.பொ.மீ. இல்லையே! ஆனாலும் இந்தக்குழு கூடும்போது தெ.பொ.மீ. கட்டாயமாக உடன் சேர்த்துக் கொள்ளப்படுகின்றாராம். பருப்பில்லாமலா திருமணம்? அந்தக் குழுவில் தீர்மானங்கள் உருவாக்கப்பட வேண்டுமே அதெல்லாம் தெ.பொ.மீ. தான். அந்தக் குழுவினர் தெ. பொ. மீ., சேது, சட்டர்ஜி ஆகியோரின் முடிவுக்கு ஒத்துவர வேண்டியதற்காக மற்றவர்கள் நடுங்க வைக்க வேண்டுமே அதெல்லாம் தெ.பொ.மீ. தான். மேற்படி குழுவுக்கு தலைவராக போடப்பட்டிருக்கும் சுனித்குமார் சட்டர்ஜி யார் தெரியுமா? சமஸ்கிருதத்தை உயிர்ப்பித்து அதை உலகிலும் தென்னாட்டிலும் பரப்ப வேண்டியதற்காக நிறுவப்பட்டிருக்கும் ஒரு நிறுவனத்தின் தலைவர், பார்ப்பனர். இவர் திராவிட மொழியை ஒழித்துக் கட்டிவிட்டு மறுவேலை பார்ப்பதாக வாயில் வாய்க்கரிசி போட்டுக் கொண்டு தென்னாட்டிலே வந்து குந்திக் கொண்டிருப்பதைக் கொண்டே இவருடைய முனைப்பை நாம் தெரிந்து கொள்ளலாம்.
|