பக்கம் எண் :

66

Untitled Document


     எப்படித் தலைமைக்கு ஆள் தேடிப் பார்த்துள்ளார்கள் பார்த்தீர்களா?
திறந்த   பெட்டிக்கு  திருடனையே காவலுக்கு வைத்தது போல இல்லையா?
இன்னும்   இதில்   தெரிந்து   கொள்ளவேண்டிய  இன்றியமையாத செய்தி
என்னவென்றால் நாவலந் தீவின் முதல்வர் நேருவே மேற்படி சட்டர்ஜியைக்
கண்டு    முடுக்கி   அனுப்பினாராம்.   திராவிடம்  தனக்குரிய  மேன்மை,
தகுதியினின்று     துண்டாடப்படாவிட்டால்   திராவிடர்  இந்தியை ஒப்புக்
கொள்வது எப்படி? இது அவர்களுடைய மாற்ற முடியாத எண்ணம்.

     நேரு இதில் காட்டும் ஊகந்தான்,  மக்கள் நிலையில் வைத்து எண்ண
முடியாத    தெ.பொ.மீ.,  சேது,   ஆகிய இரு பிள்ளைகளும் அளவுகடந்த
நெஞ்சுறுதியோடும் சுறுசுறுப்போடும் இந்த அழிப்பு வேலையில்இறங்கியதற்கு
காரணம் என்று தோன்றுகிறது.

     ஒன்று   கேளுங்கள்,    இந்தக்    கையிருப்பில்லாத சேதுப்பிள்ளை,
தேவநேயப்   பாவாணர்க்குப்   பின்னால்   சேர்க்கப்பட்ட சேதுப்பிள்ளை
திராவிட   ஆராய்ச்சிக்   குழுவினின்று   தேவநேயப் பாவாணர் நீக்கப்பட
வேண்டும்   என்று  மேலவர்க்கு  அறிவிப்பு  ஒன்று விளாசு விளாசென்று
விளாசி இருக்கிறாராம்.

     சேதுப்பிள்ளைக்குத் தெரியும் இந்தக் குழுவில் தமிழர்கள் பாவாணரை
நம்பியிருக்கிறார்கள்   என்று.   சேதுப்பிள்ளைக்குத்  தெரியும் தேவநேயப்
பாவாணருக்கு வரும் தீமை தமிழர்க்கு வந்த தீமையாகும் என்று.

     அப்படித்   தெரிந்தும்  சேதுப்பிள்ளை இப்படிப் பெரிய கழி எடுத்து
விளையாடுகின்றார் என்றால் பெரிய இடம் தமிழர்களைப் பார்த்துப் பல்லை
நறநறவென்று கடிக்கிறது.