(குயில், குரல்-1, இசை-20, 14-10-1958)
எல்லாத் துறைகளிலும் தமிழ்நாடு பழிவாங்கப்படுகிறது. இதைப் படக்கூத்தர்கள் உணரவேண்டும். தமிழ்நாட்டு அரிசி கேரளத்துக்கு! இது நடுங்கத்தக்க கொடுமை இல்லையா?
கேரளத்தைத் தொட்டுக்கொண்டு கடலில் விழும் ஒரே காரணத்தால் அத்தண்ணீர் தமிழ்நாட்டுக்கு மறிக்கப்படக்கூடாது என்று தில்லி சொல்லுகிறது. தமிழ்நாட்டு அமைச்சரும் இதற்குத் தாளம் போடவேண்டும் உயிர்த்தொல்லை இது! இல்லையா?
இலங்கைத் தமிழர்கள் ஆதலால் அவர்கள் மக்கள் நிலையை இழக்க வேண்டும் இது தமிழர்க்கு மானக்கேடு இல்லையா?
இரும்பு இருக்கிறது தமிழ்நாட்டில்! எண்ணெய் இருக்கிறது தமிழ் நாட்டில். தமிழ்நாட்டில் அவைகள் இருக்கின்றன என்ற ஒரே காரணத்தால் தில்லியின் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றன இல்லையா?
இந்தி வந்தால் தமிழ் கெடும்! என்பது தமிழர்களின் ஒன்றுபட்ட எச்சரிக்கை. இந்தியைப் புகுத்தி தமிழைத் துலைக்கத்தானே வேண்டும். இது தில்லியின் மகிழ்ச்சிக் கூத்து இல்லையா?
அழிந்துவரும் தமிழரை ஆதரிக்கும் வாயிலாகக் கலகக்காரராகிய பார்ப்பனரின் வாலை அறுக்க வேண்டும் என்பது தமிழரின் உயிர்போன்ற கொள்கை. நெய்வேலியைப் பார் மற்றும் உள்ள நிறுவனங்களைப் பார் சென்னையே உன்னைப் பார்ப்பானிடம் ஒப்புவித்து பழிவாங்குகின்றேன் என்கிறது தில்லி இல்லையா?
திராவிட மொழி ஆராய்ச்சிக்காக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒரு குழுவாம். அது வடநாட்டு மொழி ஒன்றே வாழவேண்டும் என்றுழைத்து வரும் சட்டர்ஜி இடத்திற்கு தமிழ்நாட்டுக் கங்காணிகளாகிய தெ.பொ.மீ., சேது ஆகிய இரு பிள்ளைகளிடத்தும் ஒப்படைக்கப்பட்டிருக் கிறது. தில்லி நோக்கப்படி தமிழனின் தொன்மையையும், தனிப்பெருமை யையும் தலைகீழாக்கி வருகின்றார்கள் இல்லையா?
|